
யாழ்ப்பாண பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கோப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த வேளை, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்கு தான் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவித்தல் ஓட்டப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டு அறிவித்தல்களை மக்கள் கிழித்தெறிந்தனர்.
இதேவேளை கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை, நல்லூர் பிரதேச செயலர், தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு பணித்திருந்தார் அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு நேற்றைய தினம் திருநெல்வேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையிலும், இன்றைய தினமும் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தினையும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு ஒதுக்கியமையால் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களே குழப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
