இறையாண்மையுடைய சர்வதேச பிணையங்களை கொள்வனவு செய்திருந்த “அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி” தமது முதலீட்டை வட்டியுடன் முழுமையாக செலுத்துமாறு கோரி இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
ஜூலை 25 ஆம் திகதியுடன் குறித்த பிணையங்களுக்கான பத்திரம் காலாவதியாகிறது.
அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி 250 மில்லியன் டொலரை 5.8 வீத வட்டியில் முதலீடு செய்துள்ளது.
இதன் பிரகாரம், இலங்கை குறித்த வங்கிக்கு 257.5 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளது.
குறித்த நீதிமன்ற முறைப்பாட்டின் ஆவணங்களின் பிரகாரம், ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கடனை மீள செலுத்தாமையுடன் தொடர்புபட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஸ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல பில்லியன் டொலர் சொத்துகளை குவித்து, தளர்வான நிதி விதிகளுடன் துபாய், சீஷெல்ஸ் மற்றும் St. Martin தீவுகளில் மறைத்து வைத்துள்ளதாக அந்த குற்றச்சாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையை பெற்ற பசில் ராஜபக்ஸ, ஒவ்வொரு வியாபாரத்திலும் 10 வீதத்தை கோரியதால், அவருக்கு ‘Mr. 10%’ என்ற புனைபெயர் கிடைத்ததாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கைக்கு எவ்வித விடுதலையும் இல்லை என அமெரிக்க ஹமில்டன் ரிசர்வ் வங்கி தமது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளது.