Home செய்திகள் பொலிஸாரும், ஆயுதப்படையினரும் கட்டுப்பாடுகளுடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும்:

பொலிஸாரும், ஆயுதப்படையினரும் கட்டுப்பாடுகளுடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டும்:

98
0

நாட்டில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையால் விரக்தியடைந்த மக்கள் கோபமுற்றுள்ள நிலையில் பொதுமக்களுடன் தொடர்புறும்போது சூழ்நிலையை புரிந்து பொலிஸாரும், ஆயுதப்படையினரும் கட்டுப்பாடுகளுடனும், அவதானத்துடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்று “இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்” வலியுறுத்தியுள்ளது.

எரிபொருள் நிரப்புநிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்கள்மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை உள்ளிட்ட அமைதியின்மைச் சம்பவங்கள் தற்போது அதிகளவில் பதிவாகிவருகின்றன.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பெற்றோல் மற்றும் டீசலுக்காக மணிக்கணக்காகவும், சிலவேளைகளில் நாட்கணக்கிலும் பல கிலோமீற்றர்களாக நீளும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

இந்த நெருக்கடியானது எவ்வித மக்கள் எவ்வித தீர்வுமின்றி எதிர்கொண்டிருக்கும் எரிவாயு, ஏனைய அத்தியாவசியப்பொருட்களுக்கான பற்றாக்குறை நெருக்கடிக்கு அப்பாற்பட்டதாகவே காணப்படுகின்றது.

பலர் தமது நாளாந்த வருமானத்தை இழந்திருப்பதுடன், தமது குடும்பத்தினருக்கு உணவளிக்கமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட வரிசைகளில் காத்திருந்தமையினாலும், மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டினாலும் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்த அறிக்கைகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

நாட்டில் நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலை மக்களை விரக்தியடையச்செய்திருப்பதுடன், இது அவர்களிடையே கோபமும் மூர்க்கத்தனமும் உருவாவதற்குக் காரணமாகியிருக்கின்றது.

அதன்படி நாடளாவிய ரீதியிலுள்ள பல எரிபொருள் நிரப்புநிலையங்களில் மக்கள் மத்தியில் ஏற்படும் அமைதியின்மைச்சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. குருணாகல் மஸ்பொத எரிபொருள் நிரப்புநிலையத்தில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவரைத்தாக்கிக் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் அத்துருகிரிய எரிபொருள் நிரப்புநிலையத்தில் பதிவான வன்முறைச்சம்பவங்கள் என்பன நாடெங்கிலும் உள்ள நிலையற்ற தன்மைக்கான சில உதாரணங்கள் மாத்திரமேயாகும்.

தற்போது பொலிஸாரும், ஆயுதப்படையினரும் கடமையாற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள கடுமையான சூழ்நிலை குறித்து நாம் அறிந்திருந்தாலும், பொதுமக்களின் ஒருபகுதியினராக இருக்கின்ற அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இதே அழுத்தங்களையே எதிர்கொண்டிருக்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமாத்திரமன்றி பொதுமக்களுடன் தொடர்புறும்போது கட்டுப்பாடுகளுடனும், அவதானத்துடனும் செயற்படவேண்டியதும், மக்களின் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள்மீதான பச்சாதாபத்துடன் பணியாற்றவேண்டியதும் அவசியமாகும். சட்ட அமுலாக்க அதிகாரிகள் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் நியாயமாகவும், பாரபட்சமின்றியுமே செயற்படவேண்டும். அதற்கு மாறாகச் செயற்படுவது ஏற்கனவே மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கையின்மை மேலும் வலுவடைவதற்கு வழிவகுக்கும். இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் சுமையைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளை, மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளைப் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு அப்பால், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் மக்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியமாகும். 

இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மக்களுக்கு உறுதிவழங்குவதும், நம்பிக்கையை உருவாக்குவதுமே முக்கியமான நடவடிக்கைகள் என்ற எமது நிலைப்பாட்டை நாம் மீளவலியுறுத்துகின்றோம். அரசாங்கத்தின்மீதும், சட்ட அமுலாக்கத்தின்மீதுமான பொதுமக்களின் நம்பிக்கையீனம் நாட்டிற்குக் கடுமையான பின்விளைவுகளையே ஏற்படுத்தும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.