கொலம்பியாவின் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரியான முன்னாள் கொரில்லா போராளி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்மூலம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கும் முதல் இடதுசாரித் தலைவராக குஸ்டாவோ பெட்ரோ சாதனை படைத்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் 50.47% வாக்குகளைப் பெற்று, புகாரமங்காவின் முன்னாள் மேயர் ரோடோல்போ ஹெர்னாண்டஸை பெட்ரோ தோற்கடித்தார். ஹெர்னாண்டஸ் 47.27% வாக்குகளைப் பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வெற்றி உரையின் போது, இது பொலம்பிய மக்களுக்கான வெற்றி என குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்தார். அத்துடன், கொலம்பியாவின் வெற்றிக்கு பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபடுமாறு அவர் அழைப்பு விடுத்தார். தனது கடுமையான விமர்சகர்களுக்கும் அவர் நேசக்கரம் நீட்டினார்.
கொலம்பியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து, தீர்வுகளை கண்டறிய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதி மாளிகைக்கு வரவேற்கப்படுவார்கள் என்று குஸ்டாவோ பெட்ரோ கூறினார்.
எனது அரசாங்கத்தில் அரசியல் துன்புறுத்தலோ சட்ட ரீதியான துன்புறுத்தலோ இருக்காது. மரியாதையும் உரையாடலும் மட்டுமே இருக்கும். எதிர்கட்சியினர், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் அனைவரது கருத்துக்களையும் கேட்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறும் பழமைவாத ஜனாதிபதி இவான் டுக் (Ivan Duque) முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பெட்ரோவை வாழ்த்தினார். அத்துடன், பெட்ரோவை எதிர்கொண்ட ஹெர்னாண்டஸ் தோ்தல் முடிவுகள் வெளியான உடனேய தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதேவேளை, சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதித் தேர்தலில் கொலம்பியா மக்கள் தங்கள் ஜனநாயக முடிவை வெளிப்படுத்தியமைக்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்க-கொலம்பியா உறவை மேலும் வலுப்படுத்தவும், நமது நாடுகளை சிறந்த எதிர்காலத்தை நோக்கி நகர்த்தவும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கெரில்லா போராளியான குஸ்டாவோ பெட்ரோவின் வெற்றி வரலாற்று வெற்றி என மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவின் பழமைவாதிகள் எப்பொழுதும் உறுதியானவர்கள் மற்றும் கடினமானவர்கள் என்று லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார்.
1980 களில் M-19 கெரில்லா போராளியாக இருந்த குஸ்டாவோ பெட்ரோ, பின்னர் அரசியலில் களமிறங்கி செனட்டராகவும் தலைநகர் பொகோட்டாவின் மேயராகவும் பணியாற்றினார்.
இதேவேளை, கொலம்பிய துணை ஜனாதிபதியாக கறுப்பினப் பெண்ணான பிரான்சியா மார்க்வெஸ் பொறுப்பேற்கவுள்ளார். மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் போதுகாப்பு போராளியான இவர், கொலம்பியாவின் முதல் கருப்பின துணை ஜனாதிபதியாவார்.