நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கடந்த 2021 ஜூலை 8ஆம் திகதி பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நிதியமைச்சராகவும் பதவியேற்றிருந்தார்.
இதேவேளை அரசியல் மற்றும் அரச நிர்வாகம் ஆகிய இரண்டிலும் இதுவரையில் பங்கெடுத்து வந்த தான், இனி எந்தவொரு அரச நிர்வாக பதிவிகளையும் வகிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.தன்னை தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக அவர் நிதியமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அவர் இன்று அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் ஈ.கே. 649 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.