
பிரித்தானியாவில் நேற்று (4) காலை ஒரு வீட்டில் எரிவாயு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் இங்கிலாந்தின் Kent பிரதேசத்தின்ன் Ashford நகரத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில் Willesborough, Mill View பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது. இதில் குறித்த வீடு முற்றாக தரைமட்டமாகி உள்ளதோடு, அருகில் இருந்த இரு வீடுகளும் சேதத்திற்குள்ளாகி உள்ளன.
அயலவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்க்கையில், அங்கிருந்த ஒரு வீடு பற்றி எரிந்துகொண்டிருந்தது. பின்னர் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கென்ட் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், கொழுந்துவிட்டு எரிந்த தீயை ஒரு மணிநேரமாக போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் 2 பேர் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது. மேலும், தீ எரிந்துகொண்டிருந்தபோது வீட்டுக்குள் சிக்கியிருந்த சிலரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டில் எரிவாயு வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில், அந்த வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமைடைந்தது.