
நுண்கடன் திட்டத்தினால் வடக்கில் அதிகமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அந்த கடனை செலுத்த முடியாமல் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் நுண்கடன் திட்டத்தினால் வடக்கில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. குறிப்பாக இந்த கடன் தொல்லையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பெண்களாவர். இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டுள்ள பெண்கள் அதனை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
நுண்கடன் நிறுவனங்களால் கடன் பெற்றுக்கொண்டுள்ள மக்கள் அதனை செலுத்த முடியாமல் அசெளகரிய நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றனர். அதிகமானவர்கள் கடன் செலுத்த முடியாமல் தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
நுண்கடன் திட்டத்தினால் வடக்கில் அதிகமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த அரசாங்கம் மேற்கொண்டுவந்த திட்டத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கிலே நுண்கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான நாடுகளில் இந்த திட்டம் மிகவும் வெற்றிகராமாக இடம்பெற்று வருகின்றது. எமது நாட்டிலும் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இருக்கின்றன.அரச அங்கிகாரத்துடன் அந்த நிறுவனங்கள் செயற்படவேண்டும் என்பதே அதன் நிபந்தனையாகும். என்றாலும் நாட்டில் பல நுண்கடன் நிறுவனங்கள் செயற்படுகின்றபோதும் அதுதொடர்பாக முறையாக கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதால், அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் நினைத்த பிரகாரம் செயற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.