Home உலக செய்திகள் தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாளை (ஏப்.20) முதல் இரவு நேர...

தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாளை (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு:

167
0

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அன்றைய தினத்தில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் திறக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தவிர பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக கட்டுங்கடங்காத வகையில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தரப்பால் இப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால், துறைசார் வல்லுநர்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் இதுதொடர்பாக கலந்தாலோசித்தார். அதன் தொடர்ச்சியாக பொது மக்களின் நலன் கருதி சில புதிய கட்டுப்பாடுகள் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) முதல் அமல்படுத்தப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். 

இதற்கமைய மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

அதேவேளையில், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் , ரயில்நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், நாளிதழ் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் இரவு நேரத்தில் செயல்படலாம். 

பெட்ரோல் நிலையங்கள் செயல்படலாம். இரவு நேரத்தில் பணியாற்றுபவா்கள், அதற்கான ஆவணங்களையும், பணிபுரியும் நிறுவனங்களின் அடையாள அட்டையையும் வைத்து பயணிக்கலாம்.