வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலி நோக்கி பயனித்த 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மத்திய தரைக்கடலை நேற்று கடக்கும் போது திடீரென அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் படகு கடலில் மூழ்கி அதில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நேற்று முன்தினம் பயணத்தை தொடங்கிய அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த துனிசியா கடற்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்ற போதும், அகதிகள் 41 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் உடல்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதால் அவற்றை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக துனிசியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான பயணங்களின் போது ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.