Home செய்திகள் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுதலை:

யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுதலை:

157
0

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றதினால் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவனாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட அவர் நீண்ட விசாரணைகளின் பின்னர், மாலை யாழ். நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது 2 இலட்ச ரூபா ஆள் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு வாக்கு மூலம் வழங்க வருமாறு முதல்வர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

நீண்ட நேரம் முன்னெடுத்த விசாரணைகளின் பின்னர் நேற்று இரவு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ‘பி’ அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் தண்டனை சட்டக்கோவை பிரிவின் (120, 332, 343) கீழ் மணிவண்ணன் முற்படுத்தப்பட்டார்.

இதன்படி பொலிஸாரின் விளக்கமறியல் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி, பிணை வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

மணிவண்ணன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 25 இற்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

பின்னர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பல சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் வாதிகள் உட்பட இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் அரசாங்கத்தை கண்டித்ததோடு, யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை விடுவிக்க வேண்டும் என குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.