Home செய்திகள் மக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்!

மக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்!

322
0

மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்கள் இன்று (01.04.2021) காலை சுகஜீனம் காரணமாக இறைவனடி சேர்ந்துள்ளார்.

நீண்ட காலமாக உடல் சுகயீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்துவந்த மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகை அவர்கள் யாழ்ப்பாணம் திருச்சிலுவஇ கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை 6:30 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக மன்னார் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அவர்கள் தெரிவித்தார்.

மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

16.04.1940 இல் பிறந்த ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்கள் இறை தொண்டில் தன் வாழ்வை அர்ப்பணித்த மிகச்சிறந்த சமூக சேவகனாகவும், தேசப்பற்றாளனாகவும் திகழ்ந்தவர்.

இலங்கைத் தீவில் இன்னல்களுக்கு உள்ளான தமிழர்களின் நிலை கண்டு கலங்கிய அவர் மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்ட ஓர் மாமனிதன்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையையும், தேவையையும் உள்வாங்கிக் கொண்ட ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்கள் கடினமான காலங்களிலும் துணிந்து நின்று பல வழிகளில் உறுதுணையாக செயற்பட்டவர்.

ஓர் சிறந்த தேசப்பற்றாளனை, மக்களை நேசித்த மாமனிதனை, இரக்கமும், தூய்மையும் கொண்ட இறை சேவகனை இன்று இழந்து நிற்கிறது தமிழ் சமூகம். ஆயர் இராயப்பு ஜோசெப் அவர்களின் பிரிவு ஈடு செய்யமுடியாத ஓர் பெரும் இழப்பாகவே அமைந்துவிட்டது.

இன்றைய நாளில் அவரின் தூய்மையான வாழ்விற்கும், மனித நேயத்திற்கும, தேசப்பணிக்கும் மதிப்பளித்து எம் ஆழ்ந்த இரங்கல்களை தமிழ் நாதம் ஊடக் குழுமம் தெரிவித்துக்கொள்கிறது.

கிறீஸ்தவர்களின் புனித நோன்பு காலத்தில் உயிர்துறந்துள்ள மறை ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையின் இறுதி சடங்கு தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.