
திருமறை கலாமன்றத்தின் நிறுவுனரும், கத்தோலிக்க குரு முதல்வருமான கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் இன்று சுகயீனம் காரணமாக தனது 82வது வயதில் காலமானார்.
யாழ்ப்பாணம் – இளவாலையில் பிறந்த அவர் இளவாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்று பின்னர் சென் கென்றிஸ் கல்லூரியில் உயர் கல்வியை நிறைவு செய்தார்.
1952 ஆம் ஆண்டு குருத்துவ பணிக்காக தன்னை அர்ப்பணித்த அவர் 1956 ஆம் ஆண்டு கண்டி அம்பிட்டிய குரு மடத்தில் குருத்துவ மேல் படிப்பை தொடர்ந்தார்.
1958 இல் றோம் நகருக்கு சென்ற அவர் தனது 21வது வயதில் B.A / M.A பட்டங்களை பெற்றதுடன், றோம் தமிழ்ச் சங்க தலைவராக இரு ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.
1962 ஜூலை 1இல் பரிசுத்த தந்தை 23 ஆம் அருளப்பர் அவர்களின் சிறப்பு அனுமதியுடன் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
சிறுவயது முதல் நாடகங்களில் நடித்துவந்த இவர் 1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உரும்பிராயில் “திருமறை கலாமன்றம்” என்ற அமைப்பை நிறுவி, இலங்கையிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பல நாடகங்களை அரங்கேற்றி பாராட்டுக்களை பெற்றார்.
பன்மொழி ஆளுமை கொண்ட கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் தமிழ், ஆங்கிலம், டொச் ஆகிய மொழிகளில் நூல்களையும், கட்டுரைகள், கவிதைகள் மட்டுமன்றி நாடகங்கள், நாட்டுக் கூத்துகள் என கலைத்துறையில் பன்முக ஆளுமையுடன் திகழ்ந்து பாராட்டுக்களையும், நன் மதிப்பையும் பெற்றிருந்தார்.
மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசெப் ஆண்டகையின் இழப்பு இன்று காலையில் இடம்பெற்ற செய்தி அறிந்து ஆறா துயரில் தமிழினமும், கிறீஸ்தவ சமூகமும் உள்ள நிலையில் மற்றுமோர் சிறந்த மனிதனான கலாநிதி நீ. மரியசேவியர் அடிகளார் அவர்களும் இன்று மாலையே உயிர் துறந்தார் என்ற செய்தி அறிந்து உறைந்துபோய் உள்ளனர் மக்கள்.
இவ் விருவரின் இழப்பும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகவே அமைந்துவிட்டது.