
பன்னிப்பிட்டி பகுதியில் சிறீலங்கா பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமோர் இடத்திலும் சிறீலங்கா பொலிஸார் வீதியில் ஒருவரை தாக்கும் புகைப்படம் வெளியாகி சிறீலங்கா பொலிஸாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கள இணையங்கலிலும், சமூக வலைத்தளங்கலிலும் வெளியாகியுள்ள இப் புகைப்படத்தில் உள்ள சம்பவம் வீரவில பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போதும் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
இருப்பினும், இத் தாக்குதல் சம்பவமும் கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னரே இடம்பெற்றிருப்பது தெளிவாகிறது. அதற்கு ஆதாரமாக அப் புகைப்படத்தில் உள்ள பொலிஸார் ஒருவரும், தாக்குதலுக்கு உள்ளாகும் நபரும் மற்றும் வீதியால் நடந்து செல்லும் மற்றுமொரு நபரும் முகக்கவசங்கள் அணிந்துள்ளமை உறுதிப்படுத்தி நிற்கின்றது.
2019 நவம்பர் 17ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றே கோட்டபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்திருந்தார். 2020 ஜனவரியின் இறுதியிலேயே இலங்கையில் கொரோனா நோய் பரவல் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னரே முகக்கவசம் அணியும் நடைமுறையும், சட்டமும் வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.