Home கட்டுரை ஜெனிவா பிரேரணையும் இந்தியாவும்!

ஜெனிவா பிரேரணையும் இந்தியாவும்!

198
0

கடந்த ஒரு சில மாதங்களாக ஜெனிவாவை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் முடிவுக்குவந்திருக்கின்றன. எதிர்பார்த்தது போன்று வாக்கெடுப்பில் பிரேரணை வெற்றிபெற்றிருக்கின்றது. வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்ததால்தான், பிரித்தானியா பிரேரரணையை வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்திருந்தது. முதலாவது பார்வையில் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அதன் முதலாவது ராஜதந்திர தோல்வியை பதிவு செய்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் ஒரே நேரத்தில் இரண்டு தோல்விகளை ஒரே களத்தில் சந்தித்திருக்கின்றது. பிரேரணையின் போதான வாக்கெடுப்பின் போது, இலங்கையின் உடனடி அயல்நாடும், பிராந்திய சக்தியுமான இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்திருக்கின்றது. இது ராஜபக்சக்களின் அரசாங்கத்தை பொறுத்தவரையில், பிறிதொரு ராஜதந்திர தோல்வியாகும். உண்மையில் இது தமிழர்களுக்கு வெற்றி. ஆனால் இந்த விடயத்தை தமிழர் தரப்புக்கள் (எல்லோரும் அல்ல) சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. தமிழ் சூழலில், வழமையாக எவ்வாறு, விடயங்கள் உணர்ச்சிகரமாக நோக்கப்படுமோ, அவ்வாறுதான் இப்போதும் பார்க்கப்படுகின்றது. ஒரு பிராந்திய சக்தியின் ஆதரவை முழுமையாக பெற முடியாதளவிற்கு ராஜபக்சக்களின் அரசாங்கம் பலவீனமாக இருக்கின்றது என்பதுதான் இங்கு குறித்துக்கொள்ள வேண்டிய விடயம்.

இலங்கையின் மீதான புதிய பிரேரணை விவகாரம் தலைநீட்டிய நாளிலிருந்து, ஜெனிவா விவகாரம் உணச்சிகரமாகவே நோக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாகவே, இப்போது, தமிழர்களை சர்வதேசம் ஏமாற்றிவிட்டதாகவும் – குறிப்பாக இந்தியா மீண்டும் முதுகில் குத்திவிட்டதாகவும், சிலர் கூறுவதை காண முடிகின்றது. உண்மையில் விடயங்கள் எவையுமே மூடுமந்திரமாக இடம்பெறவில்லை. மிகவும் வெளிப்படையாகவே முன்வைக்கப்பட்டு – மிகவும் வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு – மிகவும் வெளிப்படையாகவே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையாக இடம்பெறும் விடயங்களில் ஒருவரை மற்றவர் எவ்வாறு ஏமாற்ற முடியும்? இங்கு பிரச்சினை விடயங்களை சரியாக விளங்கிக்கொள்ள எவருமே (எல்லோரும் அல்ல) முயற்சிக்கவில்லை. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகள் தொடர்பில் எனது முன்னைய பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆணையாளரின் அறிக்கையை தொடர்ந்து, பேரவையின் உறுப்பு நாடுகளுக்கிடையில் விவாதிப்பதற்கான பூச்சிய வரைபு வெளியாகியிருந்தது. பூச்சிய வரைபானது, இணைத்தலைமை நாடுகள் எவ்வாறானதொரு பிரேரணையை இறுதியாக சமர்ப்பிக்க விரும்புகின்றன என்பதை தெளிவாக காண்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சிறிய மாற்றங்களுடன் இரண்டாவது வரைபு வெளியாகியிருந்தது. இதற்கிடையில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. இதன் விளைவாகவே ஒரு சில மாற்றங்களுடன் இறுதி வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அடிப்படையில்தான், பிரேரணையின் நடைமுறைப்;பந்தி, 6 இல், எதிர்கால பொறுப்புக் கூறலுக்காக, மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை, ஆய்வு செய்வது, சேகரிப்பது அத்துடன் பொருத்தமான தந்திரோபாயத்தை வகுப்பது போன்ற விடயங்களை மேற்கொள்வதற்கு, குறித்த பிரேரணை,மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கியிருக்கின்றது. இதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும். ஒரு வேளை அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்தால், மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் அதற்கான பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக, அதனை மேற்கொள்ளும். இந்த ஒரு விடயத்தை தவிர, பிரேரணையில் உள்ள ஏனைய விடயங்கள் எவையும் புதியவையல்ல. அதே வேளை முன்னைய பிரேரணைகளில் வலியுறுத்தப்பட்;டிருக்கும் விடயங்களும் இங்கு மீளவும் நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தை பொறுத்தவரையில் இது ஒரு பலமான அடியாகும். மீளவும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் ராஜபக்சக்கள் – தங்களின் கடுமையான நிலைப்பாட்டின் காரணமாக, மீளவும் சர்வதேச அழுத்தங்களை இலங்கையை நோக்கி திரட்சிபெற்றச் செய்கின்றனர். அதற்கான ஆரம்பம்தான், இந்த புதிய பிரேரணை. ஆனால் தமிழர் தரப்பை, பொறுத்தவரையில் – அதாவது, மனித உரிமைகள் பேரவையிலிருந்து இந்த விடயத்தை வெளியில் கொண்டு செல்ல வேண்டுமென்று வாதிட்டுவந்தவர்கள் இதனை ஒரு ஏமாற்றமாக பார்க்கின்றனர். வழமைபோல் கூட்டமைப்பே, இதற்கு காரணம் என்றவாறான விமர்சனங்களை முன்வைக்க முயற்சிக்கின்றனர். உண்மையில் இங்கு கூட்டமைப்பு ஒரு விடயமல்ல. ஏனெனில், கூட்டமைப்பும் இணைந்துதான், இணைத் தலைமை நாடுகளுக்கான கடிதத்தை அனுப்பியிருந்தது. ஆனால் சில விடயங்கள் சாத்தியமில்லை என்பதை விளங்கிக்கொண்ட போது, புதிய பிரேரணையை ஆதரிப்பதாக அறிவித்திருந்தது. கூட்டமைப்பை பொறுத்தவரையில் மேற்குலகுடன் மோதும் முடிவை எடுக்க விரும்பவில்லை. மேலும் கூட்டமைப்பு, ஒரு வேளை அதனை எதிர்ப்பதாக கூறினால், அரசாங்கத்தின் விருப்பமே நிறைவேறும். அரசாங்கம், புதிய பிரேரணையை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் கடுமையாக முயன்றிருந்தது. பேரவையிலிருந்து விடயத்தை முழுமையாக அகற்ற வேண்டுமென்றே முயற்சித்தது. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்படாது போயிருந்தால், அரசாங்கம் விரும்பியதே இடம்பெற்றிருக்கும்.

இந்தப் பிரேரணை தொடர்பில் பிறிதொரு வகையான விமர்சனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர். அதாவது, இந்தப் பிரேரணையானது, சீன – சார்பில் பயணிக்கும், கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை, சிங்கள மக்கள் மத்தியில் அவமானப்படுத்தி, அவர்களது செல்வாக்கை சரித்து, ஆட்சியை மாற்றுவதே இதன் பிரதான இலக்கு. இதனையே சர்வதேச சக்திகளின் முகவர்களாக தொழிற்படுவர்களும் ஆதரிக்கின்றனர். அதே வேளை, இந்தப் பிரேரணை மீண்டும் பொறுப்புக் கூறலை, இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைத்திருக்கின்றது, என்பது அவர்களின் வாதமாகும். உண்மையில் இங்கும் விடயம் சரியாக விளங்கிக்கொள்ளப்படவில்லை. இதுவரையில் முன்வைக்கப்பட்ட அனைத்து பிரேரணைகளுமே, பொறுப்புக் கூலை இலங்கைக்குள்தான் வலியுறுத்தியது. அரசாங்கம் இணங்க மறுக்கின்ற போதுதான், அழுத்தங்கள் வேறு வடிவம் கொள்கின்றன. ஆனால் இங்கு புரிந்துகொள்ள வேண்டிய விடயம், இவ்வாறான சர்வதேச அழுத்தங்களின் இலக்கு, இலங்கை அரசை நிர்மூலமாக்குவதல்ல, இலங்கை அரசாங்கத்தை தாராளவாத உலக ஒழுங்குங்குள் கொண்டுவருவது. தாராளவாத சர்வதேச ஒழுங்கை பாதுகாப்பதற்கான மேற்குலகின் தலையீடுகளும், தமிழர்களின் நீதிக்கான குரலும் ஒரிடத்தில் சந்திப்பதன் காரணமாகவே, தமிழர் பிரச்சினையும் கருத்தில் கொள்ளப்படுகின்றதேயன்றி, தமிழர்களுக்காக இங்கு எந்தவொரு விடயமும் கையாளப்படவில்லை. இதனை சரியாக விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், தமிழர் சமூகம், வெறும் உணர்வுகளை மென்று கொண்டிருப்பவர்களாகவே சுருங்கிப்போக நேரிடும்.

இந்த பின்புலத்தில்தான் இந்தியாவின் தலையீட்டையும் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தியா வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்ததையே சிலர் குற்றமாக பார்க்கின்றனர். இந்த விடயங்களை இந்திய அயலுறவுக் கொள்கையின் அடிப்படையில்தான் நோக்க வேண்டும். இலங்கையின் மீதான பிரேரணை என்பது இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றின் மீதான பிரேரணை. எனவே அதனை எழுந்தமானமாக இந்தியா ஆதரிக்காது. தனது பிராந்திய நலன்களிலிருந்து விடயங்களை நிறுத்துப் பார்த்துத்தான், தீர்மானங்களை மேற்கொள்ளும். ஜெனிவா விவகாரத்தின் போது, இந்தியா தெளிவானதொரு செய்தியை வெளிப்படு;தியிருக்கின்றது. அதாவது, இலங்கையின் மீதான மனித உரிமைகள் சார்ந்த கேள்விகளை இந்தியா இரண்டு அடிப்படையான அவதானங்களிருந்தே அவதானித்துவருகின்றது. ஒன்று, இலங்கை தமிழ் மக்களின் கௌவரம் நீதி மற்றும் சமத்துவம் – அடுத்தது, இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் சமாதானம். இந்த அடிப்படையில் – 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது, மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தி, மாகாண சபைகள் வினைத்திறனுடன் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அடங்கலாக, அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான இலங்கையின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு, சர்வதேச சமூகத்துடன் இந்தியா இணைந்து செயற்படும். இதனை விடவும் இந்தியாவிடம் தமிழர் எதனை எதிர்பார்க்கலாம்?

இந்தியாவின் கருத்துக்களும் மிகவும் வெளிப்படையானவை. எனவே இங்கும் தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் – என்று புலம்புவதில் பொருளில்லை. இந்தியா இப்போது மட்டுமல்ல, ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே, சில விடயங்களை மிகவும் வெளிப்படையாகவே கூறிவந்திருக்கின்றது. தமிழர்களுக்கு ஒரு தனிநாட்டை பெற்றுக்கொடுப்பது தங்களின் நோக்கமல்ல என்பதை இந்தியா ஆரம்பத்திலேயே அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றது. பாத்தசாரதி அப்போது இது தொடர்பில் என்ன கூறினார் – என்பதற்கான சாட்சியாக, தர்மலிங்கம் சித்தார்த்தன் இப்போதும் இருக்கின்றார். தனிநாட்டை இந்தியா பெற்றும் தராது – அதே வேளை அதனை பெறவும் அனுமதிக்காது. இதில் இந்தியா மிகவும் வெளிப்படையாகவே நடந்துகொண்டது. ஆனால் இந்தியாவை மீறியும் தங்களால் தனிநாட்டை ஸதாபிக்க முடியும் என்னும் நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்திருந்தனர். அந்த போராட்டம்தான் 2009இல் நிறைவுற்றது. இந்தியாவை எதிர்த்து – ஒரு தனிநாட்டை நிறுவ முற்பட்ட அயுதப் போராட்டமொன்றின் விளைவுகளை முன்வைத்துத்தான், தற்போதைய தமிழர் அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. உண்மையில் இந்தியாவை விரல் நீட்டும் எந்தவொரு தார்மீகப் பொறுப்பும் தமிழர் தரப்பிடம் இல்லை. ஒரு வேளை இந்தியா தனிநாடு ஒன்றை உருவாக்கித் தருகின்றோம் – என்று கூறி இறுதியில் ஏமாற்றியிருந்தால், இந்தியாவை குற்றம்சாட்டுவதில் ஒரு அர்த்தமுண்டு. ஆனால் இந்தியாவோ 1987இலிருந்து, எதனை கூறிவருகின்றதோ -அதனைத்தானே இப்போதும் கூறுகின்றது.

உண்மையில் தமிழர்களை எவருமே ஏமாற்றவில்லை. தமிழர்கள், தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். தங்களால் உலகத்தையே எதிர்த்து, அனைத்தையும் செய்ய முடியுமென்று தனி வழியில் செல்ல முயன்றனர். அதில் தோல்விகள் ஏற்படும் போது ஒப்பாரிவைக்கின்றனர். உலகமே தங்களின் கண்ணீரை துடைக்க வரவேண்டுமென்று வாதிடுகின்றனர். ஆனால் உலக போக்குகளுக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் – தங்களை திரும்பிப்பார்க்க மறுக்கின்றனர். விடயங்கள் சாதகமாக நடந்தால் அது தங்களின் திறமை ஆற்றல் என கூறிக்கொள்ளும் தமிழர் தரப்புக்கள், எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாதபோது, இந்தியாவை அமெரிக்காவை, முழு உலகத்தையும் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளாதவரையில் தமிழர் முன்னேற்றங்களை காண்பது கடினம். – யதீந்திரா –