இராணுவத்தினரின் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) அவர்கள் சிகிச்சை பயனின்றி நேற்று (26/03) வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.
கடந்த 20 ஆம் திகதி மதியம் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு அண்மையில் இராணுவத்தினரின் வாகனம் இவரை மோதியததில், தலையில் காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தவர்.
ஈழநாடு பத்திரிகையின் தலைமை ஒப்புநோக்குநராக இருந்த இவர் பின்னர் உதவி ஆசிரியராக உயர்ந்தார். ஊடகத்துறையில் பணியாற்றிய காலத்தில் பல ஊடகவியலாளர்களை உருவாக்கினார். அவரிடம் பயிற்சி பெற்ற சிலர் இன்றும் ஊடகத்துறையில் ஊடகவியலாளர்களாக பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.