Home செய்திகள் 10 நாட்களுக்கு முடக்கப்பட்டது யாழ் நகர்!

10 நாட்களுக்கு முடக்கப்பட்டது யாழ் நகர்!

15
0

யாழில் இவ் வாரம் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று உச்சம் கண்டதால் நேற்றைய தினம் யாழ் பேருந்து நிலையம் உட்பட யாழ் நகர மத்திய பகுதியை அடுத்த 10 நாட்களுக்கு முடக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டதனை முன்னிட்டு யாழ் பேருந்து நிலைய பேருந்து சேவைகள் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இன்று காலை தொடக்கம், பேருந்து நிலையம், வைத்தியசாலை, நவீன சந்தையை உள்ளடக்கிய யாழ்.நகரின் இதயப் பகுதி முடக்கிப் போயுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று காலை மாவட்டசெயலகம் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தல்களை மீறி ஒரு சில கடைகள் மற்றும் தனியார் அரச பேருந்து சேவைகள் இயங்க ஆரம்பித்தனை தொடர்ந்து அங்கு வரவளைக்கப்பட்ட இராணுவம் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை அடுத்து திறக்கப்பட்ட கடைகள் உடனடியாக மூடப்பட்டன.

இதேவேளை எடுக்கப்பட்ட தீர்மாணங்களை நடைமுறைப்படுத்துவதற்காக யாழ் நகர பகுதியில் அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர், சுகாதார துறையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கானப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிருமி நாசினி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.