Home செய்திகள் பிரபாகரன் படம் பிரசுரித்த வழக்கில் இருந்து உதயன் நிர்வாகம் விடுவிப்பு:

பிரபாகரன் படம் பிரசுரித்த வழக்கில் இருந்து உதயன் நிர்வாகம் விடுவிப்பு:

24
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் படத்துடன் கூடிய செய்தியை நவம்பர் 26 ஆம் திகதியன்று பிரசுரித்தமைக்காக உதயன் பத்திரிகை மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து உதயனின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியர்பீட பிரதிநிதி ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று (19) விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களின் அடிப்படையிலேயே இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் தொடுகப்பட்ட இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணிகளான ஆனோல்ட் பிரியந்தன், சலோசியஸ், கணாதீபன் ஆகியோரும், உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடப் பிரதிநிதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், ரிசிகேசன் ஆகியோரும் முன்னிலையாகி வாதிட்டிருந்தனர்.

இந்த வாதங்களின் அடிப்படையில் பொலிஸாரிடம் நீதிவான் சில விடயங்களை வினவினார். இறுதியில் “இந்த வழக்குத் தொடர்பில் மேலதிக விசாரணை செய்வதானால் செய்யலாம். ஆனால் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் ஆசிரிய பீடப் பிரதிநிதி கு.டிலீப்அமுதன் ஆகியோர் சந்தேகநபர்கள் என்று பெயர் குறிப்பிடப்பட்டதிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள். வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டால் இருவரும் முன்னிலையாக வேண்டும். வழக்கு ஜூலை மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றது” என நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.