
பிரிட்டனின் சர்வதேச தடை திட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவேண்டிய இலங்கையின் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிரேஸ்ட அதிகாரிகள் யார் என்பது குறிம்து, அவர்களின் சொத்துக்களை முடக்கவும், விசாக்களை முடக்கவும், பிரிட்டனின் அமைச்சர்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் அகமட் பிரபுவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பிலும், அதற்கான நீதி வேண்டி பிரிட்டனிலும், இலங்கைத் தீவிலும் தொடரும் உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பிலும் எனக்கு பெருமளவு தகவல்கள் கிடைத்துள்ளன என அவர் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக்கூறும் நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் நிலைமாற்றுக்கால நீதி செயற்பாடுள் சமாதானம் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான நடவவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் இலங்கைக்கு அறிவுறுத்தும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் வெளியாகும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
இலங்கைக்கும் பிரிட்டனிற்கும் இடையிலான எதிர்கால வர்த்தக உறவுகள் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வதற்கான பிரிட்டனின் அறிவிக்கப்பட்ட பொறுப்புக்கூறலை அலட்சியப்படுத்தாத விதத்தில் அமைந்திருப்பதை பிரிட்டிஸ் அரசாங்கம் உறுதி செய்வேண்டும் என அவர் அக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக எச்சரித்திருந்தது போன்று கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கரிசனை தரும் போக்குகள் உருவாகியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைகின்றது என்பதற்கான ஆரம்ப கட்ட எச்சரிக்கைகளாக இவையிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை இலங்கையின் ஜனநாய ஆட்சிமீதான பாரிய தாக்குதலாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.