Home உலக செய்திகள் பசித் தீயில் துடித்துப் போராடும் அம்பிகை – 15ம் நாளாக தொடரும் பட்டினிப் போர்:

பசித் தீயில் துடித்துப் போராடும் அம்பிகை – 15ம் நாளாக தொடரும் பட்டினிப் போர்:

349
0

பட்டினிப் போராட்டத்தின் 12ம் நாளை எட்டிவிட்ட அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உடல் நிலை மிகவும் சோர்வடைந்தும், கண் பார்வை சற்று மங்கலாகி  குரல் தளர்வும் ஏற்பட்டுள்ளது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளில் உதவிகள் செய்து வரும் தேசப் பற்றாளராகவும், சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளராகவும் அயராது தமிழினத்தின் விடுதலைக்காய் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த திருமதி. அம்பிகை அவர்கள் நீதி வேண்டி உயிரைத் துறக்கவும் துணிந்து பசித்தீயில் தன் உடலை உருக்கி வருகிறார்.

பாராமுகம் காட்டி வரும் பிரித்தானிய அரசின் செயற்பாடு தமிழர்களின் உரிமைக்கும், நீதிக்குமான போராட்டத்தில் இன்னுமோர் தியாகியின் உயிர்ப் பலிக்கு காத்திருப்பதாகவே தெரிகிறது.

இந்நிலையில், அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும்  அவரை காப்பாற்றவேண்டுமெனவும் வலியுறுத்தி நாளை (14-03-2021) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியொன்றும் நடைபெறவுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு பேரணி வடமேற்கு இலண்டன் ஹறோ (harrow) பகுதியில் உள்ள Northwick park Roundabout ற்கு அருகாமையில் இருந்து Kenton Road வழியாக Kingsbury வரை சென்றடையவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பெருந்திரளான மக்களை எதிர்பார்ப்பதுடன் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இரண்டு மீற்றர் (2M) தோர இடைவெளியில் மக்களை நின்று உதவுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பிகையின் நியாயமான கோரிக்கைகள் கொண்ட போராட்டத்தினை வெற்றி பெற வைப்பதோடு, அவரின் உயிரையும் காப்பாற்ற – பிரித்தானியா உட்பட அனைத்து நாடுகளிலும், அந்தந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களோடு நெருக்கத்தை பேணியவர்கள் விரைந்து செயற்பட்டு, போராட்டத்திற்கான ஆதரவுகளையும், அளுத்தங்களையும் வழங்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.

“ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..!” எனும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கேற்ப தான் பிறந்த நாட்டிற்காகவும், தான் நேசித்த மக்களுக்காகவும் தன் உயிரை தியாகம் செய்ய துணிந்துவிட்ட திருமதி. அம்பிகை செல்வக்குமார் அவர்களின் போராட்டம் வெற்றி பெறவும், அவர் உயிரோடு மீண்டுவரவும் உலகத் தமிழ் சொந்தங்கள் செயற்படவேண்டிய நேரமிது.

இன்றைய நாள் காலை 10:00 மணிக்கு தளர்ந்த குரலில் அவர்  வழங்கிய சிறிய உரை (வேண்டுகோள்) இங்கே தருகிறோம். காணொளியை தொடர்ந்து அவர் முன் வைத்துள்ள நான்கு () அம்சக் கோரிக்கைகளும் உங்கள் பார்வைக்காய் மீள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதி வேண்டி பட்டினிப் போராட்டம் நடாத்திவரும் திருமதி. அம்பிகை செல்வக்குமார் அவர்கள் முன்வைத்துள்ள நன்கு (4) அம்சக் கோரிக்கைகளாவன….

1. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பரிசீலிக்கவும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை எடுத்துக் கொள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல்.

2. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் சான்றுகளை சேகரிப்பதற்கும் குற்றவியல் வழக்குகளுக்கு கோப்புகளைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மியான்மருக்காக அல்லது சிரியாவிற்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச, சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுதல்.

ஒரு அர்த்தமுள்ள சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையானது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து சான்றுகளை சேகரிக்க வேண்டியதுடன், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு OISL இன் அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும்.

3. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கள இருப்பினை நாட்டில் வைத்திருப்பதற்கு ஏதுவாகவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசேட பிரதிநிதியை நியமித்தல்

4. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்மானிக்க ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்.