Home செய்திகள் அம்பிகையின் கோரிக்கைக்கு அமைவாக சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும்: அருட்தந்தை மா.சக்திவேல்

அம்பிகையின் கோரிக்கைக்கு அமைவாக சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டும்: அருட்தந்தை மா.சக்திவேல்

36
0

தியாகிகள் உயிர் நீப்பதையா சர்வதேசம் விரும்புகிறது. தியாகி திலீபன் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து இந்தியாவிடம் தீர்வைக் கோரிய போது அதற்கு இந்தியா தலைசாய்க்கவில்லை. அதேபோல இம்முறையும் தியாகிகள் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா? என்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை. மா.சக்திவேல்
தெரிவித்தார்.

இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் நிறுத்தக் கோரி நல்லூரில் இடம்பெற்று வரும் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு போராட்டத்தில் நேற்று (09) கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “தமிழ் மக்களுடைய நீண்ட காலப் போராட்டமானது அரசியல் சார்ந்தது. இந்த போராட்டத்தை தெற்கின் அரசாங்கம் பயங்கரவாத போராட்டமாக சித்திரித்து பல்வேறு அழிவுகளை செய்தது மட்டுமல்லாமல் இன அழிப்பினை மேற்கொண்டதையும் நாம் அனுபவித்துள்ளோம்.

இந்த இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் என கேட்கிறோம். எனினும் சர்வதேச நாடுகளும் எமக்கு எதிராக இருக்கின்றதா என சந்தேகிக்கிறோம். ஏனெனில் தற்போது வெளியாகிய ஐ.நா சபையினுடைய தீர்மானம் எமக்கு சார்பானதாக இல்லை.

இதனால் இலண்டனில் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்மணி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். அவருடைய கோரிக்கைக்கும் அமைவாக சர்வதேசம் நீதியை பெற்றுத்தருமாறு கேட்கிறோம். எமது தியாகத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த முறை இந்தியா திலீபனின் உயிரை தியாகம் செய்யும் வரை பார்த்துக் கொண்டிருந்தது.

அதேபோல இம்முறையும் தியாகிகள் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா? இதுவா மனித நீதி. எமது அரசியல் பயணத்தில் மைல் கல்லை எட்டியுள்ளோம். எனவே அம்பிகை அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றால் எமக்கு நீதி வேண்டும். அதை விடுத்து உயிர் நீப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது என்றால் அவரின் பின்னால் பலர் வர ஆயத்தமாக உள்ளார்கள்.” என்றார்.