Home உலக செய்திகள் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருவொற்றியூர் தொகுதி:

சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருவொற்றியூர் தொகுதி:

194
0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து திருவொற்றியூர் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைத்து வியப்பையும், அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளார் சீமான்.

இதனையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

திருவொற்றியூர் – தற்போது வாக்காளர்களில் ஆண்கள்-1,50,309, பெண்கள் 1,54,323, திருநங்கையர்-145 பேர் என மொத்த வாக்காளர்கள் 3,04,777 பேர் உள்ளனர். இது கடந்த 2016-ஆம் ஆண்டு பட்டியலை விட சுமார் 6 சதவீதம் அதிகமாகும்.

வடசென்னையில் அமைந்துள்ள இத்தொகுதி 1967 முதல் இருந்து வருகிறது. 2011 தேர்தலுக்கு முன்பு வரை மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருந்த திருவொற்றியூர் தொகுதி மறு சீரமைப்பின் காரணமாக திருவொற்றியூரிலிருந்து மாதவரம் தொகுதி தனியாகப் பிரிக்கப்பட்டது. அன்றைய சென்னை பட்டினத்தை ஒட்டிய பழைமையான கடலோர கிராமங்களில் திருவொற்றியூரும் ஒன்று. துறவி பட்டினத்தார் முக்தி அடைந்து ஜீவசமாதி அடைந்த இடமும் திருவொற்றியூர்தான்.

எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலண்டு, எண்ணூர் பவுண்டரீ, எம்.ஆர்.எப். டயர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, என்பீல்டு மோட்டார் சைக்கிள், கார்பொரெண்டம், டிபிஎல், எம்பிஎல், எவரெடி என ஏராளமான கனரக தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி திருவொற்றியூர். மேலும் இத்தொகுதியில் அடங்கிய மணலியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

ஒற்றீசுவரர் என அழைக்கப்படும் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தீஸ்வரர் கோயில், வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளிட்ட கோயில்கள் அடங்கிய ஆன்மிக நகரம் திருவொற்றியூர். தியாகராஜர் கோயில் தெப்பக் குளம் மற்றும் ஏராளமான மடங்கள் இங்கு அமைந்துள்ளன.

இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை மாநகரத்திற்குள் நுழைவது திருவொற்றியூர் தொகுதியில்தான்.

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதி திருவொற்றியூர் தொகுதி.

தொகுதியில் எல்லைகள், அடங்கியுள்ள பகுதிகள்: திருவொற்றியூர் தொகுதிக்கு கிழக்கே வங்கக் கடல், தெற்கே ஆர்.கே.நகர், வடக்கு மற்றும் மேற்கில் மாதவரம் தொகுதி இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கத்திவாக்கம் அடங்கிய திருவொற்றியூர் மண்டலம், சின்னச் சேக்காடு அடங்கிய மணலி மண்டலம் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

1967- ஆண்டு இத்தொகுதி ஏற்படுத்தப்பட்டதில் இருந்து நடைபெற்ற 12 பொதுத் தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

நடைபெற உள்ள தேர்தலில் திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து தொகுதியாக மாறியுள்ளது.

இதேவேளை, இம்முறை, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் மீண்டும் போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் தி.மு.க.வே இத்தொகுதியில் போட்டியிடும் எனத் தெரிகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி இறந்து போனதையடுத்து தற்போது காலியாக உள்ள இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.