
திருமதி. அம்பிகை செல்வக்குமார் அவர்கள் நான்கு (4) அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த மாதம் 27ம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்திவரும் நிலையில், 9ம் நாளான இன்று அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.
அவரது கோரிக்கைகள் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் சாதித்து வரும் பிரித்தானியாவின் முடிவால் பெரிதும் மனம் உடைந்துள்ள திருமதி. அம்பிகை செல்வக்குமார் அவர்கள் பதில் கிடைக்கும் வரை தொடர்ந்தும் உறுதியோடு தன் போராட்டத்தை தொடர்வேன் என இன்று தெரிவித்தார்.
இன்றைய நாளில் அவரின் உடல் சோர்வுற்று இருப்பதையும், கேட்கும் திறண் குறைந்தும், அவரின் பேச்சின் சத்தம் குறைந்தும் காணப்பகுகின்ற நிலையில் இன்னும் சில நாட்கள் நீடித்தால் அவரின் உடல் பெரிதும் பாதிக்கப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும் என அவரை பார்வையிட்ட வைத்தியர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரின் நியாயமான “நீதிக்கான உரிமைப் போராட்டத்திற்கு” பிரித்தானியா மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டியதும், பிரித்தானியா அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையை காலம் உணர்த்தி நிற்கின்றது.
“ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்..!” எனும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்றுக்கேற்ப தான் பிறந்த நாட்டிற்காகவும், தான் நேசித்த மக்களுக்காகவும் தன் உயிரை தியாகம் செய்ய துணிந்துவிட்ட திருமதி. அம்பிகை செல்வக்குமார் அவர்களின் போராட்டம் வெற்றி பெறவும், அவர் உயிரோடு மீண்டுவரவும் உலகத் தமிழ் சொந்தங்கள் செயற்படவேண்டிய நேரமிது.