Home தாயக செய்திகள் இரா.சம்பந்தனின் அறிக்கையில் எமக்கு உடன்பாடில்லை: ரெலோ

இரா.சம்பந்தனின் அறிக்கையில் எமக்கு உடன்பாடில்லை: ரெலோ

12
0

மனித உரிமைச் சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரைக்கு பதில் அளிக்கும் முகமாக சம்பந்தர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அவ்வறிக்கையில் கூட்டமைப்பாக எமது தலைவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தபோதிலும், எமது பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படாது வெளியிடப்பட்டமை வருத்தத்துக்குரியது என டொலோ இன்று (0703) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டொலோவின் ஊடக பேச்சாளர் கு. சுரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறுதி வரைவின் வடிவம் என்னவென்று தெரியாமல் இருக்கின்ற சூழ்நிலையிலே இருக்கின்ற வரைபை பிரேரணையாக வெற்றிகரமாக நிறைவேற்றும்படி இணை அனுசரணை நாடுகளை கோருவது எமது முயற்சியை பலமிழக்கச் செய்வதோடு குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்துவது மாத்திரமல்லாமல் எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தினையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைப்பதையும் பலவீனமடையச் செய்யும்.ஆகவே இந்த அறிக்கைக்கு நாம் ஒருபோதும் இணங்க மாட்டோம்.

மனித உரிமைச் சபையில் அங்கத்துவ நாடுகளிடம் எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையான பலமான சரத்துக்களை உள்ளடக்கிய பிரேரணையை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைப்பதுதான் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி நிற்கும் எமது மக்களுக்கு நாம் செய்யும் தலையாய கடமையாக இருக்கும். தவிர அரச பிரநிதிகள், அமைச்சருடைய கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் நேரம் கடத்துவது சரியான ஒன்றாக இந்த நேரத்தில் அமையாது.

எமது ஒன்றிணைந்த கோரிக்கைகளயும், ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரது அறிக்கையிடப்பட்ட விடயங்களையும் உள்ளடக்கியதாக மனித உரிமைச் சபையில் எமது மக்களுக்கான நீதியை உறுதிப்படுத்துவதாகவே சமர்ப்பிக்கப் படுகின்ற பிரேரணை அமைய வேண்டும் எனவும் அதை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் அங்கத்துவ நாடுகளை நாம் கோருகிறாம். இதுவே எமது நிலைப்பாடு. என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.