Home உலக செய்திகள் உடல் சோர்வுற்ற நிலையிலும் 8ம் நாளாக தொடரும் அம்பிகையின் அகிம்சை போர்:

உடல் சோர்வுற்ற நிலையிலும் 8ம் நாளாக தொடரும் அம்பிகையின் அகிம்சை போர்:

60
0

பிரித்தானியாவின் லண்டனில், உணவை உண்ண மறுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பிகையின் உடல் நிலை மிகவும் சோர்வுற்று குரல் தளர்வடைந்துள்ள நிலையிலும், 8ம் நாளான இன்றும் உறுதி தளராமல் தொடர்ந்து வருகிறார்.

தனது நான்கு கோரிக்கைகளில் ஒன்றையாவது பிரித்தானிய அரசு நிறைவேற்ற வேண்டும் அதுவரை தனது போராட்டம் தொடரும் என இன்று தெரிவித்துள்ள உலகெங்கிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களையும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கைகளை நிறைவேற்ற தத்தம் நாட்டு பிரதிநிதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

மேலும், தனது நான்கு அம்சக்கோரிக்கைகள் உள்ளடக்கிய மின்னஞ்சலினை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பி வைக்குமாறு உலகெங்கும் பரந்துவாழும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்று லண்டன் Kingsbury பகுதியில் உள்ள Roe Green Park இல் மதியம் 12:00 மனிக்கு ஒன்றுகூடவுள்ள மக்கள் வாகன பேரணி ஒன்றையும் செய்ய பிரித்தானிய மக்களால் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

அவர் முன்வைத்துள்ள நன்கு (4) அம்சக் கோரிக்கைகளாவன..

1. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் வேறு பொருத்தமான மற்றும் பயனுள்ள சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளை பரிசீலிக்கவும் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை எடுத்துக் கொள்ள ஐ.நா.பாதுகாப்புக் குழு மற்றும் ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைத்தல்.

2. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களின் சான்றுகளை சேகரிப்பதற்கும் குற்றவியல் வழக்குகளுக்கு கோப்புகளைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மியான்மருக்காக அல்லது சிரியாவிற்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச, சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுதல்.

ஒரு அர்த்தமுள்ள சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையானது இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து சான்றுகளை சேகரிக்க வேண்டியதுடன், செப்டம்பர் 2015 ஆம் ஆண்டு OISL இன் அறிக்கையில் உள்ள தகவல்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்துடன் இவற்றிற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் இருக்க வேண்டும்.

3. இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மீறல்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கள இருப்பினை நாட்டில் வைத்திருப்பதற்கு ஏதுவாகவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசேட பிரதிநிதியை நியமித்தல்

4. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ்மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்கு உரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்மானிக்க ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்.