
இலங்கை தொடர்பாக, ஜெனிவா தூதரகங்களுக்குள் விநியோகிக்கப்பட்ட ‘சீரோ’ வரைவானது குறைபாடு உள்ளதாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கின்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காரியாலயத்தினதும் ஆணையாளர் பச்சலெட் அவர்களினதும் சிபாரிசுகளுக்குக் குறைவாக குறித்த வரைவு காணப்படுவது மிகவும் மன வேதனை அளிப்பது மட்டுமன்றி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உள்ளகக் குழுவானது வெகுஜன கொலையாளிகளையும் கற்பழிப்பாளர்களையும் பாதுகாக்கும் வண்ணம் இவ்வாறான ஒரு வரைவைத் தயாரித்தமை மன வேதனையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதியதொரு தீர்மானமானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் அவர்களுடைய பாதுகாப்பையும் நலவுரித்துக்களையும் அவர்களின் வருங்கால எதிர்பார்ப்புக்களையும் காப்பாற்றுவதாக அமைய வேண்டும். தமிழ்த் தலைவர்கள் என்று கூறுவோர் சிலர் உறுப்பு நாடுகளிடம் சென்று எங்கள் பிரச்சினைகளைக் குறைத்துக் கூறினார்களோ நான் அறியேன்.
இலங்கை பற்றிய நடவடிக்கையானது இன்று ஐ.நா. பேரவையை ஒரு தராசில் தடுமாறிக் கொண்டிருக்க வைத்துள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் நடைபெற்ற பொத்துவில் – பொலிகண்டி பேரணிகள் தமிழ் மக்களிடையே மதிப்பு மிக்க அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதில் புது வேகத்தையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காணுகின்றோம். என்றார்.