Home செய்திகள் இரண்டாம் நாளாக தொடரும் இன எழுச்சிப் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

இரண்டாம் நாளாக தொடரும் இன எழுச்சிப் பேரணி – பெருந்திரளான மக்கள் பங்கேற்பு!

103
0

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான ஈழத் தமிழரின் இன எழுச்சி போராட்ட பேரணி இன்று (04/02) நாளாக தனது பயணத்தை மட்டக்களப்பில் இருந்து ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இப் பேரணியில் கலந்துகொண்டுள்ள நிலையில் பேரணி காத்தான் குடியை வந்தடைந்த போது அங்கிருந்து பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டுள்ளமையை காணமுடிகிறது.

இப் பேரணி காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று வடமாகாணத்திற்குள் நுளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரணியின் போது

எங்கே எங்கே உறவுகள் எங்கே?,

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம்,

எரிக்காதே எரிக்காதே ஜனாஸாக்களை எரிக்காதே,

திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார்,

எங்கள் நிலம் எமக்கு வேண்டும்,

வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்,

ஐ.நா சபையே தலையிடு,

வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும்,

வழக்கு வழங்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை வழங்கு

போன்ற முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களக் குடியேற்றங்கள், முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக மதங்களையும், கட்சி பேதங்களையும் கடந்து மொழியால் ஒன்றீணைந்த மக்களாக இப் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருவது வரவேற்கத்தக்கது.