Home தாயக செய்திகள் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” எழுச்சிப் பேரணிக்கு வடமாகாண அனைத்து அமைப்புக்களும் பூரண ஆதரவு!

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை” எழுச்சிப் பேரணிக்கு வடமாகாண அனைத்து அமைப்புக்களும் பூரண ஆதரவு!

68
0

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் – தமிழருக்கு எதிரான அடக்கு முறைகளை கண்டித்து இடம்பெறவுள்ள தொடர் போராட்டத்திற்கு வடக்கு மாகாண சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இன்று முற்பகல் 11.40 மணிக்கு ஆரம்பமாகி இந்தக் கூட்டம் 3 மணி நேரம் இடம்பெற்றது.

வடக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொத்துவிலில் ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்துவதற்கு அறிக்கை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.