Home கட்டுரை தமிழ்த் தேசிய அரசியல் போகுமிடம் தெரியாத நாடாளுமன்ற தலைமைகள்?

தமிழ்த் தேசிய அரசியல் போகுமிடம் தெரியாத நாடாளுமன்ற தலைமைகள்?

164
0

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொள்ளவில்லை. வாக்களிப்பிலிருந்து வெளியேறியதன் மூலம் பிறிதொரு வகையில் வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்திருக்கின்றது. கூட்டமைப்பின் வழிமுறையிலேயே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனும் வாக்களிப்பை புறக்கணித்திருக்கின்றார். ஒன்றை எதிக்காமல் விடுதல் என்பது அதனை ஆதரிப்பதற்கு சமமானதுதான். ஏனெனில் ஒரு விடயம் நியாயமற்றது எனின் அது எதிர்க்கப்பட வேண்டும். நீதி – அநீதி, சரி – தவறு – இவைகளில் நடுநிலைமை என்பது எப்போதுமே சாத்தியமற்ற ஒன்றாகும். ஒரு ஆபிரிக்க எழுத்தாளரின் வார்த்தையில் கூறுவதனால் – இவ்வாறான சந்தர்ப்பங்களில் நடுநிலைமை என்பது வாசனை தைலம் தெளித்த நாய் மலத்திற்கு ஒப்பானது. என்னதான் வாசனைக்குள் கிடந்தாலும் மலம் மலம்தான். எனவே கோட்;டபாய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்தின் போது, கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீதான கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதற்கு பதிலாக மிகவும் அமைதியாக வெளிநடப்பு செய்திருப்பதானது கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் பலமான சந்தேகங்களை ஏற்படு;த்தியிருக்கின்றது. அதே வேளை, பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டின் போதும் கூட, தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக வெளியேறியிருக்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் கூட்டமைப்பின் பதில் ஒன்றுதான் – அதாவது, நாங்கள் கோட்டபாய அரசாங்கத்திற்கு – முக்கியமாக கோட்டபாய ராஜபக்சவிற்கு நல்லிணக்கத்தை காண்பிக்கின்றோம். இது உண்மைதானா? இதன் அரசியல் உள்ளடக்கம் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே ரணில் – மைத்திரி அரசாங்கத்தோடு ஜந்து வருடங்களாக நல்லிணக்க தேனிலவில் இருந்தது. ரணிலின் ஆதரவுடன் ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டுவர முடியுமென்று காலத்தை செலவிட்டது. இந்த தேனிலவு காலம் யார் கூட்டமைப்பு – யார் அரசாங்கம் என்று விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கிருந்தது. அந்தளவு நெருக்கம். ஆனாலும் கூட்டமைப்பால் அரசியல் தீர்வில் ஒரு அடியை கூட முன்நோக்கி வைக்க முடியவில்லை. எல்லாம் நடைபெறுவது போன்றதொரு தோற்றம் தெரிந்தது ஆனால் இறுதியில் எதுவுமே நடைபெறவில்லை. இந்த அனுபவங்களை கொண்டிருக்கும் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் கோட்டபாய அரசாங்கத்திடமிருந்து நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்றது?

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வரக் கூடாதென்பதற்காக வடக்கு கிழக்கில் கடுமையான பிரச்சாரங்களை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் கோட்டபாய ராஜபக்ச தொடர்பில் கடுமையான அச்சத்தை கூட்டமைப்பினர் ஏற்படுத்தியிருந்தனர். கோட்டபாய வெற்றிபெற்றால் வெள்ளை வேன் வரும் – இப்போது உங்களிடமிருக்கும் அனைத்தையும் இழப்பீர்கள் – என்றெல்லாம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர். இவற்றை பெரும்பாலான தமிழ் மக்கள் நம்பினர். மகிந்தராஜபக்ச ஆட்சிக் காலம் தொடர்பில் அவர்கள் மத்தியில் உறைந்திருந்த அச்சங்களை கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் கடுமையாக உசுப்பிவிட்டன.

இதiதை; தொடர்ந்தே, வடக்கு கிழக்கில் சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் பெரும்திரளாக வாக்களித்திருந்தனர். இதற்கு கோட்டபாய தொடர்பில் விதைக்கப்பட்ட அச்சவுணர்வே காரணம். ஏனெனில் அதே மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் சிதறி வாக்களித்தனர். கூட்டமைப்பிற்கு பின்னடைவை கொடுத்தனர். விடயங்களை தர்க்க ரீதியாக நோக்கினால் கூட்டமைப்பால் கோட்டபாவுடன் நல்லிணக்க அரசியலை செய்ய முடியாது. ஏனெனில் அரசாங்கத்துடன் புரித்துணர்வின் அடிப்படையில் சில விடயங்களை செய்ய வேண்டுமென்று கூட்டமைப்பு உண்மையிலேயே எண்ணியிருந்தால், கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக அவ்வாறானதொரு பிரச்சாரத்தை செய்திருக்கக் கூடாது. எதிர்காலத்தில் அரசாங்கத்துடனும் உரையாட வேண்டிய தேவையுண்டு என்னும் அடிப்படையில் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பினரோ, கோட்டபாய ராஜபக்சவே தமிழ் மக்களின் ஒரேயொரு எதிரி என்பதுபோலவே தங்களின் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தனர். இத்தனைக்கும் கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கூட்டமைப்பின் சிரேஸ்ட தலைவர்களின் ஒருவரான சித்தார்த்தனை நட்புரீதியாக சந்தித்து கூட்டமைப்பின் ஆதரவை கோரியிருந்தார். தனிச் சிங்கள வாக்குகளினால் தன்னால் வெற்றிபெற முடியுமென்னும் நம்பிக்கையுடனேயே கோட்டபாய கூட்டமைப்ப அணுகியிருந்தார். கூட்டமைப்பிற்கு உண்மையிலேயே கோட்டபாய ராஜபக்சவுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்பியிருந்தால், தேர்தல் காலத்திலேயே அதனை செய்திருக்கலாம். விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு, மக்களை கேட்டிருக்கலாம். இது தொடர்பில் இந்த பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலருக்கு அறிவுறுத்தியிருந்தார். நாங்கள் எவ்வாறு அப்படிக் கூறமுடியும். ஒரு தலைமையென்றால் மக்களுக்கு தெளிவானதொரு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டுமல்லவா – அப்போது இப்படித்தான் பதிலளிக்கப்பட்டது. அது உண்மையாக இருந்தால் – கோட்டபாய எதிர்ப்பை கக்கி, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு, கோட்டபாயவிற்கு நல்லிணகத்தை வெளிப்படுத்துகின்றோம் என்று கூறுவது சரியானதொரு வழிகாட்டலா? இது தலைமைக்கு தகுதியானதா? மக்கள் ஒருவருக்கு எதிராக இருக்கின்ற போது, அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் எவ்வாறு குறித்த நபருடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதே வேளை தான் சிங்கள மக்களின் வாக்குகளினால் வெற்றிபெற்றிருக்கின்றேன் – என்று கூறும் ஒருவர் சிங்கள நலன்களை விட்டுக்கொடுத்து, கூட்டமைப்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

ராஜபக்சக்களின் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்காமல் அமைதி காத்ததிலிருந்து, இதுவரையில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி பேச்சுக்கள் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் என்னும் முக்கியத்துவத்தையே பெறுகின்றது. ஏனெனில் நாடாளுமன்றத்தில் உரத்து பேசிவிட்டு, பாதுகாப்பு அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டின் வாய்முடிக்கிடந்தால் அந்த பேச்சுக்களின் பெறுமதி என்ன? வரவு செலவுத்திட்டத்திற்கான வாக்கெடுப்பின் போது, அமைதியாக நழுவிக் கொண்டால், அரசாங்கத்தை எதிர்த்து பேசுவதன் பொருள் என்ன?

இந்த விடயங்களை ஆழமாக பார்த்தால் ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, தமிழ்த் தேசியவாதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் இன்றைய அரசியலின் இலக்கு தொடர்பில் எவரிடமும் தெளிவானதொரு நிலைப்பாடில்லை? தேர்தலில் போட்டியிடுவது – நாடாளுமன்றம் செல்வது. – அங்கு தொண்டை நோக கத்துவது – அதே போன்று மாகாண சபைக்கு செல்வது. – அங்கிருந்து அரசாங்கத்தை எதிர்த்து சில வசனங்களை வெளியிடுவது, இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , சமஸ்டி மற்றும் வடக்கு கிழக்கிணைப்பு, இந்தியா 13வது திருத்ச்சட்டம் தொடர்பில் குறிப்பிடும் போது மட்டும் அப்படியே அதனை உச்சரிப்பது – இவற்றுக்கு அப்பால்? மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்வது.

உண்மையில் இது யாருடை தவறு? அனைவருடைய தவறும். ஏனெனில் 2009இற்கு பின்னரான அரசியல் போக்கை எவ்வாறு வரையறுப்பது என்பது பற்றி – ஒரு தெளிவான, அறிவு பூர்வமான வேலைத்திடம் தொடர்பில் எவரும் சிந்திக்கவில்லை. ஒன்றில் உணர்சிகரமாக செயற்படுவது அல்லது நாம் அனைத்தும் அறிந்தவர்கள் என்னும் மனோபாவத்தில் செயற்படுவது. இந்த இரண்டுடனும்தான் கடந்த பதினொரு வருடங்கள் கழிந்திருக்கின்றன. இதன் தொடர்ச்சிதான் – தற்போதை கூட்டமைப்பின் முடிவு. கூட்டமைப்பிற்கென்று தனித்துவமான வேலைத்திட்டம் எதுவுமில்லாத காரணத்தினால், அரசாங்கத்திற்கு நல்லணக்கத்தை காண்பித்தால் ஏதாவது வாய்ப்புக்கள் கிடைக்குமாக என மீண்டும் காத்திருக்கும் அரசியலையே கூட்டமைப்பு தெரிவு செய்ய முயற்சிக்கின்றது.

கூட்டமைப்பின் இந்த முடிவு எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா கூட்டத்திதொடரின் போது கூட்டமைப்பு எத்தகைய முடிவை அறிவிக்கும் என்பதை இப்போதே ஊகிக்க முடிகின்றது. அதாவது, நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் கால அவகாசம் கொடுக்கும் முடிவொன்றை கூட்டமைப்பு ஆதரிக்கலாம். கூட்டமைப்போடு இணைந்து விக்கினேஸ்வரன் தரப்பும் இதனை ஆதரிக்கலாம். நிலைமைகளை ஆழமாக நோக்கினால், அதற்கான வாய்ப்பே அதிகம் தெரிகின்றது. ஏனெனில் எதனை நோக்கி போவது என்பது தொடர்பில் கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான புரிதல் இல்லை. தமிழ் தலைமைகளை அவ்வாறானதொரு நிலைமையை நோக்கி அழுத்தக் கூடிய நிலையில் பலமானதொரு சிவில் சமூகமும் இல்லை. தமிழ் வெகுசன வெளியிலும் இது தொடர்பில் போதிய விழிப்புணர்வில்லை. இப்போது கோட்டபாய அரசாங்கத்திற்கு நல்லிணக்கத்தை காண்பித்துவிட்டு, ஜெனிவா அமர்வில் இராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பில் கூட்டமைப்பு விவாதிக்குமனால், இப்போது காண்பிக்கும் நல்லிணக்கத்தின் பொருள் என்ன? இந்த பின்புலத்தில் சிந்தித்தால் இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிப்பதை தடுக்கும் ஒரு அரணாக கூட்டமைப்பையே அரசாங்கம் மீண்டும் பயன்படுத்தக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. கடந்த ஆட்சியின் போது, இந்த விடயத்தில் ரணிலின் நரிமூளை கூட்டமைப்பை மிகவும் வெற்றிகரமாக கையாண்டிருந்தது. இதன் விளைவு சர்வதேச அழுத்தங்கள் அதன் கனதியை இழந்து போனதுடன் மட்டும் நிற்கவில்லை. 2009இல் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து 14 அமைப்புக்கள் இணைந்து உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையும் சுக்குநூறாகியது. இன்று உலகத் தமிழர் பேரவை என்பது வெறும் நாலு பேர் கூடிப் பேசும் அமைப்பு மட்டுமே. ஜே.ஆர்.ஜெயவர்த்தன வழி சூ10ழ்ச்சித்திறனை கையாளுவதில் தேர்ச்சிமிக்க ரணிலின் சதிவலைக்குள் அதன் ஆழத்தை உணராமல் சில புலம்பெயர் அமைப்புள் விழுந்தன. இதன் விளைவாக புலம்பெயர் செயற்பாட்டுத்தளம் பலவீனமடைந்தது.

தற்போது அதன் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த ஆட்டத்தின் போதும் கூட்டமைப்பை பிரதான துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்படும். கூட்டமைப்பு ஒரு விடயத்தில் தெளிவான நலைப்பாட்டிற்கு வரவேண்டும். அதாவது, அரசாங்கத்துடன் நல்லணக்கத்ததை ஏற்படுத்தி, முன்னோக்கி பயணிக்கப்போகின்றதா அல்லது, சர்வதேச பொறிமுறைகயின் ஊடாக, அரசாங்கத்தின் முPதான நெருக்கடிகளை அதிகரித்து, அந்த நெருக்கடி நிலையை பயன்படுத்திக் கொள்ளப் போகின்றதா? – இந்த இரண்டில் எது கூட்டமைப்பின் வழிமுறை என்பதை, கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். போகுமிடத்தை தீர்மானிக்கும் ஆளுமை கூட்டமைப்பின் தலைவர்களிடம் இல்லாவிட்டால், ஒரு போதுமே ஒரு இடத்திற்கு போய்சேர முடியாது. அதாவது தமிழ்த் தேசியவாதிகள் தங்களின் தமிழ்த் தேசிய இலக்கு என்ன என்பதை தங்களுக்குள் முதலில் தீர்மானிக்க வேண்டும். தலைவர்களுக்கே போக்கிடம் தெரியாவிட்டால் அந்த தலைவர்களை நம்பியிருக்கும் தமிழ் மக்களின் நிலை? – யதீந்திரா –