Home கட்டுரை GGP, 14 மணித்தியாலங்கள் பேசி சாதிக்காததை இன்றைய தலைவர்கள் பேசி சாதிப்பார்களா?

GGP, 14 மணித்தியாலங்கள் பேசி சாதிக்காததை இன்றைய தலைவர்கள் பேசி சாதிப்பார்களா?

285
0

கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளமாட்டோம் என்று தமிழ் தலைவர்கள் பந்தயம் கட்டுகிறார்களா ? அல்லது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதில் தாம் வல்லவர்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்களா?

1939ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய நாடாளமன்றமான அரசாங்க சபையில் திரு. ஜி .ஜி. பொன்னம்பலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முன்வைத்து மூச்சுவிடாமல் 14 மணித்தியாலங்கள் உரையாற்றினார்.
கண்ட பலன் எதுவும் இல்லை.

தற்போது நாடாளுமன்றத்தில் ஓடித்திரியும் பொன் மான்களைப் பிடித்துவந்து தமிழ் மண்ணிலுள்ள தமிழ் சிறுவர்களுக்கு விளையாடக் கொடுக்கப் போவதாக தமிழ் தலைவர்கள் கொடுக்குக் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் போல் தெரிகிறது.

இன்னும் எத்தனை காலத்திற்கு எத்தனை புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடப் போகிறார்களோ தெரியவில்லை. பெரியவர்களுக்கு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டது போல் நிச்சயமாக சிறுவர்களுக்கு அத்தகைய புளுகு மூட்டைகளை அதிக நாட்களுக்கு அவிழ்த்துவிட முடியாது.

ஈழத் தமிழர்கள் மத்தியில் முதலில் ஒரு புதிய சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும் . காலம் காலமாய் தோல்வியடைந்து, பழகிப்போன சிங்கள நாடாளுமன்றச் சிந்தனை முறைக்குள் தமிழ் மக்கள் சிக்குண்டு இருக்கின்றனர்.

முதலாவதாக சிங்கள நாடாளுமன்றம் பெரும்பான்மை சிங்கள பௌத்த இனநாயக நாடளுமன்றம். எனவே சிங்கள பௌத்தர்களை பெரிதும் பெரும்பான்மையாக கொண்ட இந்த இனநாயக நாடாளுமன்றத்தில் சிறிய எண்ணிக்கை கொண்ட தமிழ் , முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேலை இல்லை. அதேவேளை எத்தகைய ஜனநாயக கலாச்சாரங்களும் இல்லாத ஒரு சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தை கொண்ட நாடு இலங்கை. அத்தகைய சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தை கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான நீதியோ, குரலோ எதுவும் பயனற்று போகும்.

எப்போதும் சிங்கள பௌத்தம் என்று வந்தால் சிங்கள பௌத்தர்கள் ஒரு பக்கமாக வாக்களிப்பார்கள். இதில் கட்சி வேறுபாடுகளை கடந்த சிங்கள பௌத்த ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்.

4/ 3 பெரும்பான்மைப் பலத்துடன் ஜே. ஆர் . ஜெயவர்த்தன ஆட்சியிலிருந்த நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றம் நடந்துகொண்ட முறைகளை இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட நாடாளமன்றதில் ராஜபக்சக்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் வேளையில் அவதானிக்க வேண்டியது இன்றைய காலகட்டத்திற்கு அவசியம்.

ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் விஞ்ஞான கைத்தொழில் மனிதவள அமைச்சராக இருந்தவர் சிறில் மத்தியூ. அவருக்கு உதவி அமைச்சராக இருந்தவர் டென்சில் பெனான்டோ. அப்போது நாடாளுமன்றத்தில் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு.அ. அமிர்தலிங்கத்தை பார்த்து உதவி அமைச்சர் டென்சில் பெனான்டோ பின்வருமாறு கூறினார்.

“” வில்லாக வளைக்கப்பட்ட கமுகம் மரத்தில் அமிர்தலிங்கத்தை தலைகீழாக இரண்டு கால்களிலும் கட்டி இரண்டாக கிழித்துச் சாகடிக்க வேண்டும் .”” என்று பேசினார்.

சிங்கள கோட்டை இராட்சியத்தில் இப்படி மன்னன் மரண தண்டனைகளை நிறைவேற்றும் முறை ஒன்று இருந்தது. அந்த மன்னராட்சிக்கால அநாகரிகமான மரண தண்டனை நிறைவேற்றும் நடைமுறையை ஒரு தமிழ் தலைவனுக்கு நிறைவேற்ற வேண்டுமென்று பேசும் அளவுக்குதான் சிங்களத் தலைவர்களின் நாடாளுமன்றமும் காட்சியளித்தது.

இவரைத் தொடர்ந்து பேசிய இவரது மூத்த அமைச்சர் சிறில் மத்தியூ மிகவும் தரக்குறைவான அவதூறு வார்த்தைகளால் அமிர்தலிங்கத்தை திட்டி தீர்த்தார். மனிதகுல நாகரிகம் வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்கு அமைச்சர் சிறில் மத்தியூ பேசிய அவதூறு வார்த்தைகளின் தரம் அமைந்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதை வரவேற்று கை தட்டி, விசில் அடித்து, கிண்டலும் கேலியும் செய்தார்கள்.

அவர்கள் பேசிய நாடாளுமன்ற பேச்சுக்களுக்கு பொருத்தமாக நடைமுறையில் 1983 கறுப்பு ஜூலை இனப்படுகொலையை நடத்திக் காட்டினர்கள். டென்சில் பெனான்டோ பேசிய படுகொலை வார்த்தைகளுக்கு பொருத்தமான வகையில் தமிழ் மக்கள் வீடு வீடாய், தெருத் தெருவாய் படுகொலைகளுக்கு உள்ளாகினர். சிறில் மத்தியூ பேசிய அவதூறு வார்த்தைகளுக்கு பொருத்தமாய் தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1982 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் ஜெயவர்த்தனவுக்கு நான்கில் மூன்று பெரும்பான்மை பலம் இருந்தது. நாடாளுமன்றப் பதவிக் காலத்தை மேலும் ஒரு 6 ஆண்டுகள் நீடிப்பதற்கு பொது வாக்கெடுப்பு என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். பொது வாக்கெடுப்பு என்பது அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால் போதும். அதன்படி நாடாளுமன்றத்தின் 75 வீத ஆசனங்களை வெறும் 50 வீத பொது வாக்கெடுபு மூலமான வாழ்த்துக்களால் பாதுகாக்கலாம். இப்படி ஜெயவர்த்தன 1982 ஆம் ஆண்டு ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தையும் கேலிக்கூத்தாக்கி ஒரு மோசமான நாடாளுமன்ற அரசியலை நடைமுறைப்படுத்தினார். இதுதான் இலங்கையின் நாடாளுமன்ற அரசியல் கலாச்சாரம்.

இத்தகைய பின்னணியில் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ராஜபக்சக்கள் நாடாளுமன்றத்தில் ஆட்சியதிகாரம் கொண்டிருக்கும் போது இலங்கை நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் மேலும் கேலிக்கூத்தாகவே அமைய முடியும். இத்தகைய கேலிக்கூத்தான , அரசியல் கலாச்சாரம் முற்றிலும் சீரழிந்த இலங்கையின் இனநாயக நாடாளுமன்றத்தில் தமிழ் தலைவர்கள் பொன் மான்களைப்பிடித்து தருவதாக குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது .

இதைவிட இன்னொரு மோசமான விபரீதத்திற்கும் இடமுண்டு. தமிழ், முஸ்லிம் இனங்களை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு அரச கட்டில் ஏறி இருக்கிறது ராஜபக்ச அரசாங்கம். சிங்கள பௌத்த இனவாதத்தால் கடந்த ஓராண்டுக்குள் மிக மோசமாக தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது முஸ்லிம் தலைமைகள்.

ஆனால் தற்போது முஸ்லிம்களுக்கு பெரிதும் தலைமை தாங்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தோற்கடிக்கப்பட்டவர்களை அணைத்து தமது எஜமானிய மேன்மையை சிங்களத் தலைவர்கள் உலகுக்கு காட்ட விரும்புகிறார்கள். சிறுபான்மை இனங்களின் ஆதரவுடன் தாம் ஒரு புதிய அரசியல் யாப்பை கொண்டு வந்ததாக உலகுக்கு காட்டவேண்டிய தேவையின் நிமித்தம் இப்படி ஒரு நாடகமாட ராஜபக்சக்கள் விரும்புகிறார்கள் போல் தெரிகிறது. தோற்கடிக்கப்பட்டோரை வைத்து அவ்வாறு செய்வது சாத்தியம்தான்.

“”யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே”” என்றவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இவ்வாறு அமைச்சர் பதவியை கொடுப்பதற்கான ஒரு முன் அறிவித்தலாக இது இருக்கின்றது போல் தெரிகிறது. அதாவது அரசியல் யாப்புக்கு முஸ்லிம் தலைவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முஸ்லிம் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி. சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து ராஜபக்சக்கள் தம்மை தற்காத்துக் கொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அமைச்சர் பதவி என்ற ஒரு துருப்புச் சீட்டை அளவர்கள் ஆடப்போறார்கள் போல் தெரிகிறது.

குறிப்பாக வெளிநாடுகளின் அரங்கங்களில் காட்சிப்படுத்துவதள்காக ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கு பாதி வெளிவிவகார அமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. மிகவும் பலம் வாய்ந்த இந்த ராஜபக்ச அரசாங்கம் முழு அளவிலான வெளிநாட்டு அமைச்சர் பதவியை இனிமேல் தாரைவார்க்க மாட்டார்கள். ஆனால் போர்க்குற்ற விசாரணையை தாண்ட , சர்வதேச அரங்கில் தமிழரின் பேரால் காட்சிப்படுத்த ஓர் அரை அமைச்சர் பதவி போதும்.

கருவாட்டு வாசம் வீசும் எஜமானின் பக்கம் தம் மூக்கை திருப்பிக் கொண்டு வாசலில் படியில் காத்திருக்கும் நன்றியுள்ள பிராணிகளுக்கு முழு கருவாட்டு தூண்டைப் போடத் தேவையில்லை ; அந்தக் கருவாட்டின் முள்ளைப் போட்டாலே போதுமானது. கூடவே இவர்கள் அரசியல் யாப்புக்கும் ஆதரவு அளித்துவிடுவார்கள். இங்கு இரட்டை ஆபத்து தமிழ் மக்களைக் காத்திருக்கிறது.

ஒன்று, போர்குற்ற இரத்தக் கறைக்கு சர்வதேச அரங்கில் தமிழ்த் தலைவர்களின் கைகளால் வெள்ளை அடிப்பது. இரண்டு, அரசியல் யாப்பை தமிழ் தலைவர்களின் ஆதரவுடன் நிறைவேற்றியதாக காட்டுவது. இந்த இரண்டும் மகா மோசமான ஆபத்துக்கள். சிங்களத் தலைமைகள் மிகவும் சாதுரியம் மிக்க இராஜதந்திர மெருகுடையவர்கள். அந்த நேரத்துக்கும் தருணத்துக்கும் தக்க தாளமும் ,ஆட்டமும் , பாட்டும் போடுவார்கள்.

இதுவிடயத்தில் தமிழ் மக்கள்தான் அதிகம் விழிப்புடன் இருந்து இத்தகைய ஆபத்துக்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் வரவுள்ள அண்மைக் காலங்களில் இந்தியாவில் இருந்து தமக்கு சவால்கள் வரமுடியும் என்று எதிர்பார்க்கும் ராஜபக்சக்கள் இந்தியாவை கையாளுவதற்கான ஓர் இராஜதந்திர தூதரை நிரந்தரமாக புதுடில்லிக்கு அனுப்புகிறார்கள். அவர் அமைச்சருக்கு உரிய முழு அளவிலான அந்தஸ்துடன் நியமிக்கப்படுகிறார். இந்தியாவுக்கென ஒரு தனியான வெளிநாட்டமைச்சர் நியமிக்கப்படுகிறார். அத்துடன் அவர் புதுடில்லியில் நிரந்தரமாக தூதர் என்ற பெயரில் அமைச்சராக இருக்கப் போறார். இப்படி சிங்களத் தலைவர்கள் முன்கூட்டிய யோசனையுடன் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளும் போது தமிழ் தலைவர்களோ பால் போச்சி சூப்பும் நாடாளுமன்ற அரசியலை சிறுபிள்ளைத்தனமாக நடத்த பார்க்கிறார்கள்.

தமிழ் தலைவர்கள் எவரிடம் எந்த விதமான திட்டங்களும் கிடையாது. பின்வரும் பாட்டி கதை ஒன்றுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

பாட்டி தனது பூட்ட சிறுவனுக்கு சொன்ன கதை இது. தனது பூட்ட சிறுவனுக்கு ஒரு குதிரை வாங்கி தருவதாக பாட்டி சொன்னாள். அதில் அவன் அமர்ந்து வேகமாக சவாரி செய்ய முடியும் என்றும் சொன்னார். சிறுவன் அதை நம்பி காத்திருந்தான். அந்தக் கதையைச் சொல்லியே பாட்டி சிறுவனை ஏமாற்றி தனக்கு வேண்டிய அனைத்தையும் செய்விப்பாள். ஒருநாள் சிறுவனுடன் பாட்டி வீதியால் போய்க்கொண்டிருந்த போது வழியில் குதிரையின் உடைந்த ஒரு லாடனைப் பாட்டி கண்டெடுத்து அதை சிறுவன் கையில் கொடுத்து இனி எங்களுக்கு மூன்று லாடனும் ஒரு குதிரையின்தான் தேவை என்று கூறினாள். சிறுவனுக்கு மகிழ்ச்சி உள்ளங்காலில் இருந்து உச்சிவரை ஏறியது.

இத்தகைய பார்ட்டி கதையைத்தான் தமிழ் நாடாளுமன்ற தலைவர்கள் தமிழ் மக்களுக்குச் சொல்ல போறார்கள் போல் தெரிகிறதே தவிர சிங்களத் தலைவர்கள் போல் திட்டமிட்டு செயற்படுத்துவதற்கான எந்தவித வேலைத்திட்டங்களையும் இவர்கள் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இறுதியில் பாட்டி கதைதான் மிஞ்சும் போல் தெரிகிறது.

– தி.திபாகரன் –