
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இன்று (02/09) 2 மணி நேர பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா – வைத்தியசாலை வளாகத்தில் காலை 9:00 மணி முதல் 11:00 மணிவரையும் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த போராட்டத்தில்
- அரச சட்டங்கள் அனைவருக்கும் சமம் ,
- எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி,
- மன அமைதியுடன் பணிசெய்ய விடு
போன்ற வாசகங்கள் அமைந்த பதாதைகளை ஏந்தி சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமது பணி நடவடிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கைவிரல் அடையாள நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனை தவிர்த்து பழைய முறையின் படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான செயற்பாட்டை தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், தமது கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டங்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.