Home தாயக செய்திகள் நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்: செல்வம்

நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்: செல்வம்

90
0

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் இருப்பையும் உடைத்தெறிய நினைக்கும் நாட்டின் தற்போதை அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதற்கு நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

13,19 ஆவது திருத்தச் சட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் வடக்கு மாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் கிடைக்கும் என்று எவரும் கனவு காணக் கூடாது என்றும் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன், “மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்துள்ள அரசாங்கம் 13 , 19 ஆவது திருத்தங்களை நீக்குவது மாத்திரமல்ல. வடக்கிலும் கிழக்கிலும் முழுமையாக தடம் பதிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக வடக்கு , கிழக்கில் தமிழர்களின் பூர்வீகத்தை முற்றாக உடைத்தெறிவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான வல்லமையை எதிர்தரப்பினர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஒருமித்த கொள்கையின் அனைத்து தமிழ் பிரிதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்றிணைந்து செயற்படாவிடின், அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவது சவாலாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அபிவிருத்தியைக் காண்பித்து இனப்பிரச்சினை தீர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும், அனைவரும் ஒன்றிணையும் பட்சத்தில் அரசாங்கத்தை எதிர்த்து பலமாகச் செயற்பட முடியும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.