Home தாயக செய்திகள் வீட்டை உடைக்க முன்னின்ற கஜேந்திரகுமாரின் கூடு சிதறியது!

வீட்டை உடைக்க முன்னின்ற கஜேந்திரகுமாரின் கூடு சிதறியது!

271
0

தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்குள் முரண்பாடுகளும், உட்பூசலும் இருப்பதோடு பிளவு நிலையிலும் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அண்மைய தேர்தலில் தனக்கு சதி செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னை தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும், பேச்சாளர் பதவியில் இருந்தும் நீக்கியிருப்பதாகவும் அறிவதாக மணிவண்ணன் நேற்று இரவு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதே வேளை பிளவை தடுத்து கட்சியின் நன்மை கருதி தலைமையுடன் பேச விரும்புவதாகவும் அதுவரை தனது ஆதரவாளர்களை அமைகாக்குமாறும் கோரியும் இருந்தார்.

இந்த நிலையில் தனது பாராளுமன்ற பயணத்திற்கு முன்னதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும், செயலாளரும் சில ஆதரவாளர்களுடன் இன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற போது அங்கு குறித்த விடையம் தொடர்பில் கேட்ட போதே ஊடகங்களுக்கு பதிலளித்த அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்….

நேற்று முந்தினம் (13/08) இரவு தமது கட்சியின் மத்திய குழு கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், அதில் குறிப்பாக மணிவண்ணன் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டதும் உண்மையே.

எமது கட்சியின் மத்திய குழு முடிவில் படி தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும், பேச்சாளர் பதவியில் இருந்தும் நீக்கியிருப்பதாகவும் அதை நேற்றைய (14/08) தினம் மின்னஞ்சல் மூலம் மணிவண்ணனுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

அதே வேளை உத்தியோகபூர்வமாக எழுத்துமூலமான எமது முடிவை அவருக்கு அனுப்பி வைப்போம் எனவும் கூறிய அவர் எதற்காக மணிவண்ணன் மீது இந்த கடும் நடவடிக்கை என கூறவில்லை.

நடந்துமுடிந்த தேர்தலின் மறு நாளான வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்குள் சலசலப்பு ஆரம்பமாகியிருந்தது.

அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் ஆதரவற்று கட்டுப்பணத்தை இழந்திருந்த தமிழ் மக்கள் தேசிய முன்னணி அதன் பின்னர் சட்டத்தரணிகளான மணிவண்ணன், சுகாஷ் ஆகியோரின் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையால் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கான ஆதரவாளர் வட்டம் ஒன்றை உருவாக்கியும் இருந்தார்கள்.

அதன் காரணமாக இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கு பல ஆயிரம் மக்கள் தமது ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.

இருந்த போதும் கட்சித் தலைமை அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதையோ, மக்கள் விருப்பம் என்ன என்பதையோ எண்ணிப்பாராமல் சில சதி வலைகளை பின்னி இம்முறை தேர்தலில் காய்களை நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தேசியப்பட்டியல் விவகாரம் கட்சிக்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது மக்கள் ஆதரவு பெற்ற மணிவண்ணன் மற்றும் சுகாஷ் ஆகிய இருவரில் ஒருவருக்கு கூட அந்த இடத்தை வழங்காது தனது நீண்டகால நண்பனுக்கு வழங்கியிருப்பதே பெரும் பிரச்சனைகளை தோற்றுவித்ததாகவும் அறியமுடிகிறது.

2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலை மாறி செல்வதை அவதானித்து தவறாக செல்வதை வெளிப்படுத்தி அதிலிருந்து பிரிந்து வந்த சிலருள் ஒருவரே கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அன்றிலிருந்து இன்று வரை கூட்டமைப்பின் முகத்திரையை கிளித்தெறிந்து அதன் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியவர்களுள் ஒருவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே.

இவ்வாறு இருக்கையில் தன் கட்சிக்குள் முதல் வெற்றியின் அதுவும் ஒருவர் மட்டும் வெற்றிபெற்ற நிலையிலேயே அக் கட்சியை வழி நடாத்த தெரியாமல் பிளவு வருமளவிற்கு இட்டுச் சென்றுள்ளதானது இது இனி வரும் காலங்களில் பாரிய பின்னடைவை ஏற்படுத்த கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.