Home செய்திகள் உட்பூசலை தடுக்க கூடுகிறது இலங்கை தமிழ் அரசுக் கட்சி!

உட்பூசலை தடுக்க கூடுகிறது இலங்கை தமிழ் அரசுக் கட்சி!

58
0

தேசியப் பட்டியல் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சிக்குள் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் எதிர்வரும் 15-08-2020 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், அரசியல் குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் மற்றும் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படும் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இக்கூட்டம் பங்காளிக் கட்சிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தமிழ் அரசுக் கட்சி என்ற வட்டத்திற்குள் மட்டும் இடம்பெறவுள்ளதோடு, தேசிய பட்டியலுக்கான பரிந்துரைகளை அனுப்பும் இறுதி நாளாக நளைய தினம் (14ம் திகதியை) தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் தமது கூட்டத்தை மறு நாளான 15ம் திகதிக்கு நடாத்த சம்பந்தர் தலைமை முடிவெடுத்தமையானது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை அப்படியே நடைமுறைப்படுத்தவே விரும்புவதை வெளிக்காட்டி நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கது.