Home தாயக செய்திகள் சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறினால் நாங்கள் அழிந்துவிடுவோம்: நீதியரசர் விக்னேஸ்வரன்

சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறினால் நாங்கள் அழிந்துவிடுவோம்: நீதியரசர் விக்னேஸ்வரன்

48
0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் கையாற்களாக மாறி, வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களினுடைய மனதை மெல்ல மெல்லமாக மாற்றி உரிமைகளை விட்டு சலுகைகளை நோக்கி செல்ல வைப்பதற்கான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த தேர்தலின் முடிவு வெளிப்படுத்தியுள்ளது.

எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்காக தேர்தல் காலங்களில் எமது கட்சியின் பிரசாரத்துக்காக உழைத்த நண்பர்கள், நலன் விரும்பிகள், எமது கட்சியின் தொண்டர்கள் அனைவரையும் கௌரவிக்கும் முகமாக நடைபெற்று முடிந்த தேர்தலில் எமது கட்சியின் சார்பில் வெற்றியீட்டி பாராளுமன்றம் செல்லவிருக்கும் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-

போர் முடிவடைந்த பின்னர் இன்று வரை இருக்கின்ற அரசாங்கங்கள் இராணுவத்தினரை வைத்திருப்பதற்குக் காரணம் வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் யுத்திகளாக இளைஞர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, களியாட்ட நிகழ்வுகளில் அவர்களை ஈடுபடுத்தி அவர்களுடைய மனங்களை மாற்றுகின்றார்கள்.

இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு போரினுடைய வலிகள், துன்பங்கள் தெரியாது. ஏனென்றால் போர் நடைபெற்ற காலத்தில் அவர்கள் சிறுவர்களாக இருந்திருப்பார்கள் இப்பொழுதுதான் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று இளைஞர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்ன தேவை களியாட்ட நிகழ்வுகளும் போதைப் பொருள் பாவனை போன்ற தற்காலிக சந்தோகங்களில் இருக்கின்றார்களே தவிர வருங்காலத்திலே தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது, தமிழனின் கலாசாரம், பண்பாடு, மொழி இவை அனைத்தையும் அழிக்க துடிக்கின்றார்கள் போன்றவை பற்றிய எந்த சிந்தனையும் கிடையாது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே தேற்தல் முடிவான “மக்கள் தீர்மானம்” தரப்பட்டிருக்கின்றது. ஆகவே, எமது இளைஞர்கள் இதிலிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் பல விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களுடைய குறிக்கோள்களை மாற்ற வேண்டும். சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறுவோமாக இருந்தால் நாங்கள் அழிந்தவராகிவிடுவோம்.

வெகுவிரைவிலே இந்த நாட்டிலே சர்வதிகாரம் திளைக்கப் போகின்றது. அதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய அத்திவாரம் இடப்பட்டு விட்டது. ஆனாலும் எமது உரிமைகளை நாம் கேட்டே தீருவோம். ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் அதிகார பலம் அவர்களிடம் சென்றதன் பின்னர் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன என்ற நினைக்கின்றார்கள்.

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவரும் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன். – என்றார்.