Home செய்திகள் வட மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் வினியோகம்:

வட மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் வினியோகம்:

47
0

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்டங்களின் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் இன்று பொலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ள 508 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய நிலையத்திலிருந்து இன்று காலை 9.15 மணி முதல் அனுப்பிவைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 5 லட்சத்து 71 ஆயிரம் 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்கு பெட்டிகள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியிலிருந்து தீவிர பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 136 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 6 ஆயிரம் வாக்காளர்கள் புத்தளத்தில் இடம் பெயர்ந்துள்ள நிலையில் புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள (05-08-2020) தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.