Home தாயக செய்திகள் முடிவு மக்களின் கையில் – வல்வையில் முழங்கிய சுரேஸ்:

முடிவு மக்களின் கையில் – வல்வையில் முழங்கிய சுரேஸ்:

261
0

நடைபெறப்போகிற தேர்தல் என்பது இந்தப் போராட்டத்தைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தை திட்டமிடக்கூடிய ஒரு தேர்தல். ஒரு கால கட்டத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் வரும். அதற்கான காலம் தான் இது. இந்த மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். ஆகவே, தமிழ் மக்கள் தமது உரிமையுடன், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றால் மாற்றம் என்பது அவசியம். எனவே, எவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானியுங்கள்.

இவ்வாறு, நேற்று மாலை வல்வெட்டித்துறையில் நடைபெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எதிர் நோக்கக் கூடிய இரண்டு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள். காணிகள் விடுவிக்கப்படவில்லை, காணாமலாக்கப்பட்டோருக்கான தொடர்பான எந்த விதமான முடிவும் இல்லை, அரசியல் கைதிகள் விடுவிப்பு இல்லை. மற்றையது தமிழ் மக்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான பாரிய ஒரு போராட்டத்தை நடாத்திய மக்கள். அந்த போராட்டத்துக்கான ஒரு தலைவனை உருவாக்கிய மண். வெளிநாடுகளில் இலங்கையை பற்றி தெரிகின்றது என்றால் முக்கிய காரணம் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம். அந்த போராட்டத்தை இமயம் அளவுக்கு உயர்த்தி தரைப்படை, கடல்படை, விமானப்படை என முப்படைகளையும் உருவாக்கி மக்களினுடைய விடுதலையை ஒரு உச்ச நிலைக்கு கொண்டு சென்ற தலைவனை உருவாக்கிய மண். பாலைஸ்தீன விடுதலை இயக்கம் இன்றும் தமது விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதுபோலவே நாமும் 35 வருடங்களாக ஒரு ஆயுதப் போராட்டத்தை நடாத்தி இன்றும் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக போராட வேண்டிய சூழ்நிலையில் இருக்க வேண்டிய மக்களாக இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக, உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக பல உயிர்களை கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் அரசாங்கத்துக்கு தெரியாதவை அல்ல. ஆனால் இன்றும் கூட தமிழ் மக்களுக்கு ஒரு சமத்துவத்தைக் கொடுப்பதாக இல்லை. சில புத்த பிக்குகள் கூறுகிறார்கள் நாங்கள் உங்களுக்கு போடும் பிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்கள். தென்பகுதியில் இருக்கும் அரசியல் வாதிகள் சிலர் தாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றார்கள். நீங்கள் கொடுப்பதை நாங்கள் வாங்கிக் கொள்வதற்கு நாம் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்கள் உரிமைகளைத்தான் கேட்கின்றோம். இந்த மண்ணில் உங்களைப் போல வாழவேண்டும் என கேட்கின்றோம். எங்கள் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என கேட்கின்றோம். ஆகவே, அதை பிச்சையாக இட முடியாது. தெளிவாக ஒன்றை கூறிக்கொள்ளுகின்றேன். எங்களுடைய உரிமைகளை கேட்டு பாரிய இழப்புக்கள், தியாகங்களைச் செய்திருக்கின்றோம்.

ஜனாதிபதி, பிரதமர் புரிந்து கொள்ளட்டும் எமது உரிமைப் போராட்டங்கள் இலங்கைக்குள் மட்டும் நின்று விடவில்லை. எமது உரிமைப்போராட்டம் உலக நாடுகள் வரை சென்றுள்ளது. பல நாடுகளில் இதைப்பற்றி பாராளுமன்றங்களில் விவாதிக்கப்படுகின்றது. ஐ.நா சபையில் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஆகவே, நாங்கள் தப்பிவிடலாம், விரும்பிய அனைத்தையும் செய்யலாம், பெரும்பான்மையான இனம், முப்படைகள் எங்களிடம் இருக்கின்றது என்று ஆணவத்துடன் செல்லலாம். ஆனால், நாம் அதை அனுமதிக்கப் போவதுமில்லை. கேட்கப் போவதுமில்லை.

தமிழன் எவனாவது தனது உரிமையைப் பற்றிப் பேசினால் அது இனவாதம். பிரபாகரன் அவர்கள் தமிழர்களுடைய உரிமையைப் பற்றிப் பேசினால் அது இனவாதம். உரிமையைப் பற்றி பேசுபவன் அனைவரும் பிரபாகரனாக இருந்தால் அவர்கள் பிரபாகரன்களாகவே இருக்கட்டும். அதில் எந்தத் தப்பும் கிடையாது.

நாளாந்தம் பத்திரிகைகளில் பார்க்கும் போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஆணவத்தனமான கருத்துக்களுக்கு அப்பால் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக அல்லது வன்முறை கொண்டவர்களாக கருதுகின்றார்கள். புத்த பிக்கு ஒருவர் கூறுகையில் நீங்கள் வன்முறைக்குத் தயாராகினால் நாங்களும் வன்முறைக்குத் தாயாராகுவோம் என்கின்றார். நாங்கள் யாரும் வன்முறையைப் பற்றிப் பேசவில்லை. நாம் பேசுவது எமது உரிமைகளைப் பற்றியே ஆகும். நாங்கள் எமது உரிமைகளைப் பற்றி பேசுகின்ற போது அது உங்களுக்கு வன்முறை விளங்குகின்றது என்றால் அது உங்களது செவிகளில் இருக்கின்ற குறைபாடு என்பதை கூறுக்கொள்கின்றேன்.

உங்களுக்கு எவ்வளவு ஆணவம் இருக்கின்றதோ அதேபோல எங்களுக்கும் தமிழன் என்ற ஆணவமும், இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற ஆணவமும் எங்களிடமும் இருக்கின்றது. ஆகவே, எந்த ஒரு காலகட்டத்திலும் நாங்கள் எமது உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக இல்லை. பல இலட்சம் இழப்புக்கள், பல கோடி பெறுமதியான சொத்துக்கள் இந்த இழப்புக்கள் அனைத்தும் உங்களுக்கு அடிமைகளாக நாங்கள் வாழ்வதற்காக அல்ல. தமிழ் மக்களும் இந்த மண்ணின் மைந்தர்கள், அவர்களுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

கூட்டமைப்பில் இருந்த சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் என்ன செய்திருக்க வேண்டும் என்றால் முதலில் உலக நாடுகளின் மத்தியஸ்தின் அடிப்படையில் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி பேசியிருக்க வேண்டும். வட- கிழக்கு இணைப்புப் பற்றி பேசியிருக்க வேண்டும். எந்த விதமான ஒரு அரசியலமைப்பு முறைமை பொருத்தமானது என பேசியிருக்க வேண்டும். வட – கிழக்கு மத சார்பற்ற பிரதேசமாக இருக்க வேண்டுமா இல்லையா என பேசியிருக்க வேண்டும். பேசிய முடிவுகள் அரசியல் சாசனத்தில் வர வேண்டும்.

ஆனால் இவை எதுவுமே பேசப்படவில்லை. 83 தடவை அரசியல் சாசனம் சம்பந்தமாக பேசியதாகக் கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் பேசியவற்றில் முக்கியமாக இருக்கக் கூடிய விடயங்கள் பாராளுமன்றத் தேர்தலை மாற்றுவது, ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது, தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக பேசுகின்ற போது வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக பேசப்படவே இல்லை. சம்பந்தன் ஐயாவிடம் கேட்டபொழுது இணைப்பு பற்றி எதுவும் பேசவே இல்லை என்று கூறுவிட்டார். அது மாத்திரமல்லாமல் வடக்கு கிழக்கில் பௌத்த மதத்திற்கு முதலிடம் என ஏற்றுக் கொண்டார்கள். பாராளுமன்றத்தில் சுமந்திரன் தமிழ் மக்கள் பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டதாக பேசுகின்றார். நாங்கள் ஒரு போதும் கூறவில்லை. ஆனால், சுமந்திரன் எங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றில் பேசுகின்றார்;. இது போலவே சமஷ்டி விடயத்திலும் ஒரு வியாக்கியானங்கள் கூறினார்கள்.

அரசியல் சாசனத்தில் 90 வீதமான அனைத்தும் முடிவடைந்து விட்டது அடுத்த முறை சென்றால் மீதமுள்ள 10 வீதத்தை முடிப்போம் என சுமந்திரன் கூறுகின்றார். ஆனால் இவர்கள் பாராளுமன்றத்துக்குச் செல்வதற்கு முன்னரே அரசியல் சாசனம் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டார்கள்.

மகிந்த ராஜபக்ஷ கூறுகின்றார் பிரபாகரன் கேட்பதை சம்பந்தன் கேட்கக் கூடாது என்கின்றார். ஆனால் பிரபாகரன் கேட்பதைத்தான் சம்பந்தன் கேட்கின்றார் என்றால் மகிந்தவுக்கு உண்மையாகவே அரசியல் புரியவில்லை. சமஷ்டிக்கும் தனிநாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

வெறுமனே மகிந்த ராஜபக்ஷ மட்டும் இல்லை பெரும்பாலான சிங்கள புத்தி ஜீவிகளுக்கும் கூட சமஷ்டிக்கும் தனிநாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. ஒரே நாட்டுக்குள் ஒரு அதிகாரப் பங்கீட்டைப் பற்றி சமஷ்டி பேசுகின்றது. நாடு பிரிப்பைப் பற்றி பேசவில்லை. ஆனால் அவர்கள் நாடு பிரிப்பு பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, அவ்வாறானவர்கள் தமிழ் மக்களினுடைய உரிமைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவார்கள் என்று சொல்ல முடியாது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்துடன் ஒரு பேச்சுவாத்தை நடைபெற்றாலே தவிர தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்க மாட்டாது.

சுமந்திரன் வெளிப்படையாக செல்ல வேண்டும் எங்களுக்கும் தமிழ் தேசியத்துக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் ஈ.பி.டி.பியுடனும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனும் இணைந்து அமைச்சுப் பதவிகளைக் கேட்கின்றோம் என்பதை சொல்ல வேண்டும்.

சில பேர் கூறுகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தலைவர் பிரபாகரன் கைநீட்டிக் காட்டிய கட்சி என்கின்றார்கள். அப்போது நாங்களும் இருந்தோம். புதுக்குடியிருப்பில் 2004 ஆண்டு பிரபாகரன் அவர்களின் அழைப்பில் சென்று மூன்று மணி நேரம் இலங்கையில் இருக்கக் கூடிய அரசியல் சூழல், இந்தியாவில் இருக்கக் கூடிய அரசியல் சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் பேசியிருந்தோம். அவரைப் பொறுத்த மட்டில் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு தேவைப்பட்டது. அந்த தீர்வை முன்னோக்கி நகர்த்த தேவை ஏற்பட்டது. அதற்கு தமிழ் கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காகவே ஒருங்கிணைத்தார்.

ஒரு காலகட்டத்திலும் கூறவில்லை அரசாங்கத்துக்கு பாதுகாப்பாக இருங்கள், அரசாங்கத்தைப் பலப்படுத்துங்கள், தமிழ் மக்கள் அனைவரது கோரிக்கைகளையும் கைவிடுங்கள் என்று எந்தக் கட்டத்திலும் அவர் கூறியது கிடையாது. அவரின் நோகத்திற்கு மாறாக செயற்படுகிறது சம்பந்தன், சுமந்திரன் கூட்டும் அதன் குழாமும்.

ஆகவே, எல்லாவற்றையும் ஆராய்ந்து நாட்டின் இன்றைய நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கால கட்டத்தில் அந்த தேவைக்கேற்ப மாற்றங்கள் வரும். ஆந்த மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். ஆகவே, தமிழ் மக்கள் தமது உரிமையுடன், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றால் மாற்றம் என்பது அவசியம். எனவே, எவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். என்றார்.