Home தாயக செய்திகள் 1983 “கறுப்பு ஜூலை” இனப்படுகொலையின் 37ம் ஆண்டு நினைவு இன்று:

1983 “கறுப்பு ஜூலை” இனப்படுகொலையின் 37ம் ஆண்டு நினைவு இன்று:

70
0

சிங்களப் பேரினவாத அரசாங்கமும், சிங்கள பெளத்த காடையரும் இணைந்து தமிழினத்தை கொடூரமாக வதைத்து கொன்றழித்த “கறுப்பு ஜூலை – 23” இன்றுடன் 37 ஆண்டுகளை கடந்து செல்கிறது.

இலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலை நிகழ்வும் அதற்கு முன்னரான (1956, 1958, 1977) நிகழ்வுகளும் தெற்கிலிருந்த தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி செல்லத் தூண்டியது.

அவர்கள் சிங்களப்பகுதிகளை விட்டு தமிழர் பகுதிகளுக்கு வந்தார்கள். இலங்கைத்தீவு இரண்டாக உடைந்தது. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்களும் வடக்குக் கிழக்கை வந்தடைந்தார்கள்.

தமிழர்களுக்கு அவர்களது நிலம் தேவை என்பதையும் உரிமை தேவை என்பதையும் விடுதலை வேண்டும் என்பதையும் கறுப்பு ஜூலையினால் ஏற்பட்ட துயரம் வலிமையாக வரைந்திருந்ததன் வெளிப்பாடே தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் பின் நாட்களில் பல்லாயிரக்கணக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராடத்தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

37 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தமாக கறுப்பு ஜூலையின் நினைவுகள் வலித்துக் கொண்டுதானிருக்கிறது.

இவை எல்லா வற்றிற்கும் மேலாக 2009 ஆம் ஆண்டில் சர்வதேசத்தின் அனுசரணையுடன், பல நாடுகளின் ஆயுத மற்றும் இராணூவ தொழில் நுட்ப உதவிகளோடு பல இலட்சம் தமிழர்களை இன அழிப்பு செய்ததோடு தமிழர்களின் பலமாக இருந்த தமிழர் சேனையையும் அழித்து மெளனித்துவிட்ட சூழலில் இன்றும் தொடர்கிறது அடக்குமுறையும், நில அபகரிப்பும்.

சிங்கள தேசம் இந்தப் படுகொலைகள் யாவற்றையும் நிறுத்தத் தயாரில்லை என்பதையும் தமிழ் மக்களை ஒழித்தே தீருவோம் என்பதில் கொண்டிருக்கும் தீவிரத்தையுமே நமக்கு உணர்த்துகின்றன. இவ்வளவு படுகொலைகளையும் செய்தவர்கள் இன்னமும் ஒடுக்கி அழிக்க மூர்க்கத்தோடு இருக்கும்போது ஒடுக்கப்படும் இனமாக உள்ள தமிழினம் விழித்தெழுந்து மீண்டும் ஒற்றுமையோடு எதிரியை நோக்கி பாயவேண்டிய சூழல் மீண்டும் எழுந்துள்ளது.