Home செய்திகள் மதுபான கடைகளில் அலை மோதும் குடிகார கூட்டம்:

மதுபான கடைகளில் அலை மோதும் குடிகார கூட்டம்:

71
0

நேற்று முதல் மதுபான விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து மதுபானக் கொள்வனவிற்காக மதுக்கடைகளின் முன் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுவது அவமானமாக இருப்பதாக யாழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாடு இன்னமும் அச்ச சூழலில் இருந்து மீளாமல் இருக்கும் நிலையில் ஏனைய இடங்களில் கடைப்பிடிக்கப்படும், மற்றும் கடைப்பிடிக்க வற்புறுத்தப்படும் சமூக இடைவெளி கூட இல்லாது எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி குடிகாரர்கள் முண்டியடித்து சாராயக்கடைகளின் முன் நிற்பது பெருத்த அவமானத்தை தருவதோடு, நோய் பரவல் அதிகரிக்கும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் மேலும் தெரிவித்தனர்.

வீட்டில் சமையல் சாமான்கள் வாங்கவோ, பிள்ளைக்கு பால்மா வாங்கவோ அன்றி மருந்து வாங்கவோ போகச் சொன்னால் போக மறுக்கும் ஆணவர் கூட்டம், குடியை கெடுக்கும் குடி போதைக்கு அடிமையாகி தன்னையும், தன் நிலையையும் மறந்து குடித்துக் கெடுவது மட்டும் அன்றி வீட்டாரின் மானத்தையும் விற்றுவருவதாக வேதனையுடன் கூறினர்.

இதேவேளை, இலங்கையில் மதுபானச்சாலைகளை திறப்பதற்கு அனுமதியளித்துள்ள முடிவை அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் கோரோனா பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது கடந்த மார்ச் 20ஆம் திகதிக்குப் பின்னர் மதுபானச்சாலைகள் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும் அன்றைய தினத்துடன் மறு அறிவித்தல்வரை மதுபானச்சாலைகள் மூடப்பட்டிருந்த போதும் 3 வாரங்களின் பின்னர் நேற்று முதல் மதுபானச்சாலைகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.