Home செய்திகள் தமிழீழ காவல்துறையில் தனித்துவமான முத்திரை பதித்த “கடமை வீரன்” இராமனாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவில்:

தமிழீழ காவல்துறையில் தனித்துவமான முத்திரை பதித்த “கடமை வீரன்” இராமனாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவில்:

509
0

10/05/2009 அன்று தமிழீழ காவல்துறை அதிகாரிகளுக்கான ஒன்றுகூடல் ஒன்று இன்று உலகிற்கே தெரிந்த இடமாகவும், பேசுபொருளாகவும் அமைந்துவிட்ட முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.

“அடுத்தது என்ன?” என்ற கேள்வி மனதளவில் எல்லோரிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனால் வெளிப்படையாக யாரும் பேசவில்லை. தமிழீழ காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ (ரமேஸ்) அவர்கள், “போராட்டம் தொடரும், அவரவர் விடப்பட்ட இடங்களில் கடமையைத் தொடருங்கள்” என்றார். இதன் போதுதான் இராமநாதன் ஐயா தன்னையும் கடமையில் ஈடுபடுத்துமாறும், எனக்கு சீருடையும் தைத்து தாருங்கள் என வலியுறுத்திக் கொண்டிருந்தார். இராமநாதன் ஐயா தட்டுத்தடுமாறி எழுந்து நின்று அப்படி சொன்னபோது ஒரு கணம் நான் திகைத்துப் போய்விட்டேன். ஆனால் அவரின் உடல்நிலை காரணமாக அவரது கோரிக்கை பொறுப்பாளர் இளங்கோ அவர்களால் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் எல்லோர் மனதிலும் “அவரின் கடமை உணர்வால்” அவர் உயர்ந்து நின்றார்.

2009 பெப்ரவரி மாதம் இறுதி யுத்தம் நடைபெற்றிருந்த காலத்தில், இரணைப்பாலை செந்தூரன் சிலையடியில், கடமையின் போது ஏற்பட்ட விபத்தினால், அவருக்கு கால் ஒன்று அகற்றப்பட்டிருந்தது. அக்காயம் சரிவர குணமாகாமையே அவரை பணிக்கு அனுமதிக்க முடியாமைக்கான காரணமாக அமைந்தது.

25/05/1945 அன்று யாழ் மாவட்டம் பெரியவிளானில் பிறந்த இராசையா இராமநாதன் (இராமநாதன் ஐயா) , தனது கல்வியை யாழ்/ஸ்கந்தவரோதய கல்லூரியில் கற்றிருந்தார். பாடசாலை நாட்களில் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் திகழ்ந்த அவர், கல்வியை நிறைவு செய்த பின், இலங்கை காவல்துறை சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு, குற்ற விசாரணைப் பிரிவில் சிறப்பான பணிகளை ஆற்றியிருந்தார்.

1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்களையடுத்து, தாயகத்தில் இருந்து வெளியேறி ஜேர்மனி  நாட்டில் தஞ்சம் பெற்று வசித்து வந்தார்.

சில காலத்தின் பின் நாடு திரும்பிய இவர், ஊரக மட்டத்தில் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வந்தார். 1993ம் ஆண்டு தமிழீழ காவல்துறையில் இணைந்த அவர் ஆரம்பத்திலிருந்தே தனக்கான பணிகளை தனது பாணியில் மிகச் சிறப்பாக செய்து வந்தமையினால், 1995ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று, யாழ்ப்பாணம் காவல் பணிமனைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர், மாங்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் இயங்கிய, காவல்துறை பயிற்சி கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி, பல புதிய காவல்துறை உறுப்பினர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். 

இக்காலப்பகுதியில் இவரால் தயாரிக்கப்பட்ட, புலனாய்வு நடைமுறைகள் தொடர்பான பாடத்திட்டங்கள், காவல்துறை தலைமையினால் அங்கீகரிக்கப்பட்டு, அடுத்து வந்த காலங்களில் பாடவிதானமாக்கப்பட்டமை இவரின் கடமைக்கும், ஆளுமைக்கும் கிடைத்த நன்மதிப்பாகும்.

காவல்துறைக்கு வெளியே, விடுதலைப்புலிகளின் ஏனைய பிரிவுகளிலும் விரிவுரைகளை நடத்தியுள்ளார். குறிப்பாக இம்ரான்-பாண்டியன் படையணியினால் உருவாக்கப்பட்ட படைக்காவலர் அணி (military police) இராமநாதன் ஐயாவால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய் மொழியுடன் சிங்களம், ஆங்கிலம் மற்றும் டொச்சு மொழிகளில் புலமை பெற்றிருந்தமையினால், பல அரிய தகவல்களை ஏனைய மொழி மூலங்களில் இருந்து தமிழாக்கம் செய்து நமக்கு வழங்குவார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில், மன்னார் மடுவில் நடைபெற்றிருந்த கொலை சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஒப்படைக்கும் நிகழ்வில், தமிழீழ காவல்துறையும், சிறிலங்கா காவல்துறையும் 28/07/2002 அன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வில், தமிழீழ காவல்துறையின் பிரதிநிதியாக இராமநாதன் ஐயா பங்கு பற்றியிருந்தார். 

மேற் குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஒன்றுகூடல் நிறைவுபெற்ற 10/05/2009 அன்றிரவு ,சிறீலங்கா படையினரின் எறிகணை தாக்குதல் ஒன்றில் மீண்டும் படுகாயம் அடைந்த இராமநாதன் ஐயா, 11/05/2009 அன்று, செஞ்சிலுவை சங்கத்தின் மீட்புப் படகுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின் நாங்கள் யாரும் இராமநாதனை ஐயாவைக் காணவில்லை. பிந்திக் கிடைத்த தகவலின்படி, 12/05/2009 அன்று, ஸ்ரீலங்காவின் மருத்துவமனை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக, அறியக்கிடைத்தது.

இராமநாதன் ஐயா அனைத்திற்கும் மேலாக கடமையை நேசித்தவர். அதனூடே தமிழர் தாயகத்தை நேசித்தவர். அவர் முள்ளிவாய்க்காலில் இருந்து விடைபெற்ற வேளை, கண்ணீர் சிந்தி அழுதார். தான் நேசித்த மக்களையும், தேசத்தையும் இனிமேல் காணப்போவதில்லை என்பதனை, அவர் உள்ளுணர்வால் உணர்ந்து இருக்கலாம்.
“அவர் ஒரு கடமை வீரன்” அவருடன் பழகிய அந்த காலப்பதிவுகள் இன்றும் என் கண் முன் நிழலாய். தமிழீழ வரலாற்றில் அவர் நினைவுகள் என்றும் உயிர் வாழும்.

இ.ரஞ்சித்குமார் 
10/05/2020