
சீனாவில் ஆரம்பித்து இன்று உலகின் 169 நாடுகளை இயல்புநிலை முடக்கத்திற்குள் உட்படுத்தியிருக்கும் கொரோனா உயிர் கொல்லி நோயால் இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 250 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந் நோய் பரவ ஆரம்பித்து சில வாரங்களில் இந்த நோயினால் சுமார் 2 மில்லியன் மக்கள் வரை உலகளவில் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார ஆய்வுகள் தெரிவித்திருந்த போதும் அது இன்றைக்கு இரட்டிப்பு மடங்காகி வருவது உலகையே அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
உலகின் வல்லரசு நாடாகவும், ஐ.நா விலும், மற்றும் சர்வதேச அரங்கிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளை அதிகமாக ஆட்டம் காண வைத்துள்ள இந்த கொரோனா நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் காவு கொண்டுள்ளது.
நேற்றுவரை வெளியான புள்ளிவிபரங்களின் படி அமெரிக்காவில் மட்டும் 11,88,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 68,602 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 186,599 பேர் பாதிக்கப்பட்டும், 28,446 உயிரிழந்துமுள்ள பிரித்தானியா மூன்றாம் இடத்தில் உள்ள போதும், இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவிற்கு அடுத்ததான 2ம் இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது.
