Home உலக செய்திகள் பிரிட்டன் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள பிரதாபனின் மரணம்!

பிரிட்டன் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள பிரதாபனின் மரணம்!

508
0

தமிழ்த் தேசிய பணிகளில் முன்னின்று உழத்துவந்த “தேசப்பற்றாளன்” பிரதாபனின் மரணம் பிரித்தானியா வாழ் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Bridge Park Hotel உரிமையாளரும், நீண்ட காலமாக பலவகைகளில் தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்த திரு லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் தனது 52வது வயதில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் நேற்றைய தினம் (02/05/2020) காலமானார்.

ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிவந்த பிரதாபன் சிகிச்சை பலனின்றிக் உயிரிழந்தார் என்ற செய்தி அவரோடு நெருங்கி பழகிய, மற்றும் அவரை அறிந்த அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தான் பங்கெடுக்கின்ற அனைத்து விடயங்களலும் முன்னின்றும் உழைக்கும் ஒருவர். தாயகம் சார்ந்த பணிகளில் தன் பங்களிப்பை தன்னால் முடிந்தவரையில் காத்திரமாகச் செய்து வந்தவர்.

விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட பிரதாபன் அவர்கள், தமிழ் மக்களுக்கான பிரித்தானிய தழுவிய இல்ல மெய்வல்லுநர் போட்டியை ஒழுங்குபடுத்தி அதனை திறம்பட நடாத்தியவர்களுள் முதன்மையானவர். பிரித்தானியாவில் நடாத்தப்படுகின்ற பல விளையாட்டுத்துறையின் நிர்வாகிகளில் முக்கியமானவர். அலாதியான நிர்வாகத் திறமை கொண்ட இவர் இயல்பாகவும் மிகவும் எளிமையாகவும் அனைவருடனும் பழகுவார்.

தமிழ் தேசிய பணிகள் நிமித்தம் தாயகம் மற்றும் ஏனைய இடங்களில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் செயற்பாட்டளர்கள் பலர் இவரது விடுதியில் பல நாட்கள் இலவசமாக தங்கி செல்வது வழமை.

மீளத்துயில் கொள்ளும் பிரதாபனின் இறுதி நிகழ்வுகளில் ஊட பங்குகொள்ள முடியாத சூழலுக்குள் வேதனையுடன் சிக்குண்டு கிடக்கின்றது எம் சமூகம்.

சிறந்த சமூக சேவகனும், நற்பண்பாளனுமாகிய திரு.லோ.பிரதாபன் அவர்களுக்கு தமிழ் நாதம் குழுமமும் துயரத்தில் பங்குகொண்டு தலைசாய்த்து வணக்கத்தையும் செலுத்திக்கொள்கிரது.