Home உலக செய்திகள் லண்டனில் – இரு பிள்ளைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!

லண்டனில் – இரு பிள்ளைகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!

302
0

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனது இலங்கைத் தமிழரான தந்தை ஒருவர் தன் இரு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டன் பகுதியான இல்பேட் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணம் வடமராட்சியை சொந்த இடமாகக் கொண்ட 40 வயதான நிதின்குமார் (குமார் அல்லது நிதி என அழைக்கப்படுபவர்) என்பவரே தனது மூன்று வயது மகனையும், ஒரு வயது மகளையும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதோடு பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக லண்டன் பொலிஸாரால் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் மாலை 4:30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தை அடுத்து தனது பிள்ளைகளை காப்பாற்றுமாறு கதறி அழுது கூக்குரலிட்ட குறித்த பிள்ளைகளின் தாயாரின் சத்தம் கேட்டு அயலவர்கள் பொலீஸிற்கு வழங்கிய தகவலை அடுத்தே காவல்துறை அங்கு விரைந்துள்ளது.

ஒரு வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே மரணமான போதும் ஆபத்தான நிலையில் இருந்த 3 வயது ஆண் பிள்ளையையும், தந்தையையும் அவசர சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருந்த போதும் சிகிச்சை பலனின்றி 3 வயது ஆண் குழந்தை இறந்துள்ளார். ஆனால் பிள்ளைகளை கொலை செய்த பின் தற்கொலைக்கு முயன்ற தந்தை (நிதின்குமார்) ஆபத்தான நிலையை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அன்பானவரும், கூச்ச சுபாவம் கொண்டவருமான நிதின் குமார் எப்படி இத்தகைய செயலை செய்தார் என நிதின்குமார் பணியாற்றிவந்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெறுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பாகவே கடையில் வேலை முடித்து வீடு திரும்பியிருந்ததாகவும் கூறிய கடை உரிமையாளர், Lockdown காலத்தில் வேலைக்கு போவது தொடர்பில் வீட்டில் ஒரே பிரச்சனை, போகவேண்டாம் என மனைவி கூறிவருகிறார் என கூறியதாகவும், இருப்பினும் எந்த பதட்டமும் இன்றி சாதாரணமாகவே வேலைக்கு வந்து போகும் அவர் வேலையில் நேர்மையும், கண்ணியமும் கொண்டவர் எனவும் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

தனது சகோதரர் ஒருவர் கொரோனா நோயினால் அண்மையிலேயே இறந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாகவே வேலைக்கு போகவேண்டாம் என மனைவி வலியுறுத்திய போதும், பொருளாதார நிலமை கருதி வேலைக்கு போய்வந்த வேலையிலும் தொடர்ந்து இடம்பெற்ற வாக்குவாதத்தால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.