Home செய்திகள் யாழில் – ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல் படுத்த வேண்டியுள்ளது: கமால் குணரட்ண

யாழில் – ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல் படுத்த வேண்டியுள்ளது: கமால் குணரட்ண

58
0

COVID-19 வைரஸ் தாக்கம் தொடர்ந்து இருப்பதால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டி உள்ளதாக இலங்கை பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (17-04-2020) விஜம் ஒன்றை மேற்கொண்ட பாதுகாப்பு செயலர் பலாலி படைத் தலைமையகத்தில் முப்படைகள், மற்றும் பொலிஸாருடன் நடாத்திய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான இச் சூழலில் பணியாற்றிவரும் படையினர் மற்றும் பொலிஸாரை நேரில் சந்தித்து நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும், அவர்கள் முன்னெடுத்து வரும் பணிகளை ஆராயவுமே நான் இன்று இங்கு வந்தேன்.

கொரோனா அச்சம் தீவிரமாக உள்ள மாவட்டங்களுள் யாழ்ப்பாணமும் ஒன்றாக உள்ளது. அதனால் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் சரியான நிலைமை ஏற்படும் வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல் படுத்தப்படுவதும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படுவதும் தவிர்க்கமுடியாதுள்ளது.

சுகாதாரத் துறையினரது அறிவுறுத்தல்களையும், பாதுகாப்புத் துறையினரது அறிவுறுத்தல்களையும் கேட்டு நடந்துகொண்டு மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும். அப்போது தான் விரைவில் இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு நாடு திரும்பும்.

அத்தோடு யாருக்காவது நோய் அறிகுறிகள் இருக்குமாயின் எந்தவித அச்சமும் இன்றி பரிசோதனைக்கு முன்வந்து தம்மை பரிசோதித்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.