Home உலக செய்திகள் தனி மனித உதவிகளும் – சந்தர்ப்பத்தை சாதகமாக்கி வசூலிக்க ஆரம்பித்துள்ள நிறுவனங்களும்!

தனி மனித உதவிகளும் – சந்தர்ப்பத்தை சாதகமாக்கி வசூலிக்க ஆரம்பித்துள்ள நிறுவனங்களும்!

131
0

இலங்கையின் வடபகுதியில், நாளாந்தம் கூலித் தொழில் செய்து வாழ்ந்த குடும்பங்கள் தற்போதுள்ள கொரோனா அச்ச அசாதாரண சூழலால் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையோடு, நாளாந்த உணவுத் தேவைக்கே ஏதுமின்றி தவிக்கின்றனர்.

இந்த நிலையில், கிளிநொச்சி வர்த்தகரான எஸ்.கே.நாதன் அவர்கள் தனிமனிதராக முன்வந்து அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 7000 குடும்பங்களுக்கு இதுவரை உலர் உணவுப் பொருட்களை வழங்கிவைத்துள்ளதாக கிளிநொச்சியில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய உணவுகள் அடங்கிய Rs.900/= பெறுமதியான உலர் உணவுப் பொதிகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

இதே போல், மீசாலை காளி கோயில் ஆலய திருவிழாவிற்காக சேர்த்த நிதியை பயன்படுத்தி 55 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளன.

ஆனால், இந்த நிலையிலும், பல அமைப்புக்கள், ஆலயங்கள், தொண்டு நிறுவனங்கள் என்பன இச்சந்தர்ப்பத்தையும் தமக்கு சாதகமாக மாற்றி தாமும் உதவி செய்ய ஆரம்பித்துள்ளன. அது வரவேற்கத்தக்க விடையமே. ஆனால் எஸ்.கே.நாதன் போல் தம்மிடம் உள்ள வசதிக்கு ஏற்ப இவர்கள் அனைவரும் உதவி செய்தால் பாராட்டலாம்.

அதைவிடுத்து, உதவிக்கரம் நீட்டுமாறு மக்களிடம் கோரிக்கைகள் விடப்படுகின்றது. போதாது என்று அதற்கு ஒரு விளம்பரம் வேறு. இதை என்னவென்று சொல்வது…?

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கேட்டுக்கொண்டது போல மத ஸ்தலங்கள் தம்மிடம் உள்ள நிதிகளில் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். அதே போல் வசதி படைத்தவர்களும், பெரும் வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் போன்றோர் தாமாகவே இதனை செய்ய முன்வர வேண்டும்.

அதை விடுத்து, மக்களிடம் உதவிக்கரம் நீட்டுமாறு கேட்டு மக்கள் பணத்தில் தங்கள் நிறுவன அல்லது அமைப்பு பெயர்களை விளம்பரப்படுத்தி கீழ்த்தரமான சுயனல வேலைகளை செய்யாதீர்கள். இது செத்த பிணத்தின் நெற்றியில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை திருடுவதற்கு ஒப்பானது. எரியிற வீட்டில் பிடுங்குவது இலாபம் என இச்சூழலை பயன் படுத்த வேண்டாம்.

இது இலங்கையில் மட்டுமோ, அன்றி வேறு ஒரு நாட்டில் மட்டுமோ இல்லை. அனைத்து நாடுகளிலும் மக்கள் உயிர் அச்சுறுத்தலோடே வாழ்கின்றனர். எல்லா நாடுகளிலும் வேலைகள் இன்றி வீடுகளில் இருப்போர் மிக அதிகம். வெளிநாடு என்ற பெயரோடு மட்டும் வெளிநாடுகளில் வாழும் பலர் வீசா இன்றி மறைமுகமாக மிகக் குறைந்த ஊதியத்திற்கு கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைபார்த்து வந்தவர்களே. அவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் ஏமாற்றி பிழைத்துக் கொண்டே இருப்பார்கள்.