Home செய்திகள் பொருட்களை பதுக்கும் வியாபாரிகளுக்கு யாழ்மாவட்ட அரசாங்க அதிபரின் கடும் எச்சரிக்கை!

பொருட்களை பதுக்கும் வியாபாரிகளுக்கு யாழ்மாவட்ட அரசாங்க அதிபரின் கடும் எச்சரிக்கை!

84
0

யாழ்ப்பாண மாவட்டத்தில் எந்த ஒரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை. அதையும் மீறி பதுக்கலில் ஈடுபடும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று தவிர்க்க நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வாரங்களுக்கு மூடப்பட்டதன் பின்னர், பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூழலை சாதகமாக்கிக்கொண்டுள்ள மொத்த வியாபாரிகள் பொருட்களை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

பொதுமக்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு எரிபொருள் தட்டுப்பாடு என்று அச்சமடையத் தேவையில்லை. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான சகல பொருட்களும் கொழும்பிலிருந்து வழமைபோல் கொண்டுவரப்படும்.

எனினும் அவ்வாறு ஒரு பிரச்சனை ஏற்படுமிடத்து அதிகாரிகளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் தற்பொழுது கூட்டுறவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளேன். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை தாராளமாக வழங்குமாறு எந்தவித பிரச்சனையும் இல்லாது மக்களுக்கு விநியோகிக்கு மாறும் தெரிவித்துள்ளேன்.

அத்துடன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கட்டளை விடுத்துள்ளேன் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.