Home செய்திகள் சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாக மட்டுமே எமக்கான தீர்வு கிட்டும்:

சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாக மட்டுமே எமக்கான தீர்வு கிட்டும்:

228
0

பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – சர்வதேச குற்றவியல் விசாரணையானது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவே இலங்கை விசாரிக்கப்படவேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.குறிதத் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவிக்கையில்,

30/1 தீர்மானத்தில் உள்ளக விசாரணையே வலியுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு இடத்திலும் – கலப்புப் பொறிமுறை என்ற வார்த்தை பிரயோகிக்கப்படவில்லை. இந்நிலையில் – உள்ளக விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு சாதகம் ஏற்படப்போவதில்லை. இந்த – 30/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக கூறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு – மூன்றாவது தடவையாகவும் வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தில் – ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் – இரண்டாவது வருடத்தைத் தொடர்ந்தும் வழங்குவதில் எந்தவொரு நியாயப்பாடும் இல்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் என்ற வகையிலே – 30/1 தீர்மானத்தில் நேரடியாக எம்மோடு தொடர்புபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகமானது – வெறுமனே ஒரு கண்துடைப்பானதாகும். என்ற கோரிக்கைகளை – வலியுறுத்தி – எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் பங்குகொள்ளும் ஐ.நா உறுப்புநாடுகளின் – மனச்சாட்சியை தட்டும் வகையில் – பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் – வடக்கில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கில் அம்பாறையிலும் மாபெரும் கவனயீர்ப்பை போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம். வடக்கில் யாழ்ப்பாணத்தில் கிட்டு பூங்காவிலும், கிழக்கில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையிலும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

தமிழ் மக்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்ற விடயமல்ல. மாறாக – சிறிலங்கா அரசு- தமிழ்த்தேசத்தை அழித்து ஒட்டுமொத்த இலங்கை தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது – அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்காக – தமிழ் மக்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் – இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றனர். 2009 உடன் நிறைவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப்படுகொலை நடைபெற்றபோது – அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு -2009 இல் ஆட்சியிலிருந்த அரசாங்கம் மட்டுமல்லாது – சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க தரப்புகளுமே முயன்றனர். அதேசூழலே இன்றும் உள்ளது.
சிறிலங்காவினுடைய இராணுவத்தின் செயற்பாடுகள் அனைத்தும் – ஒட்டுமொத்த சிங்கள தேசத்தின் நலன்களை பேணுவதாகவே உள்ள நிலையில், எதிர்காலத்திலும் இதே சூழலே தொடர்ந்தும் அமைந்திருக்கும். இந்தப் பின்னணியில் – தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோருவதோ -மனித குலத்துக்கெதிரான போர் குற்றங்களுக்கு நீதி கோருவதோ – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோருவதோ – சிறிலங்கா அரசின் பங்களிப்போடு ஒருபோதும் நடைபெறப்போவதில்லை. அத்துடன் -சிறிலங்கா அரசு அத்தகைய முயற்சிகளை தோற்கடிக்கக் கூடிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதும் உறுதி.

2012 இலிருந்து ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் தீர்மானங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசைக்கொண்டே பொறுப்புக் கூறவைக்கும் நிகழ்ச்சி நிரலாகவே காணப்படுகின்றன. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையும் என்பதையே பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் வந்துள்ளனர். தற்போது ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் 30/1 தீர்மானம் வரை வந்துள்ளது. இத் தீர்மானம் கூட – பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உள்ளக விசாரணையை வலியுறுத்துவதாகவே உள்ளநிலையில் – இதனை பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் நிராகரித்தே வந்திருக்கிறோம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் என்ற வகையிலே – 30/1 தீர்மானத்தில் நேரடியாக எம்மோடு தொடர்புபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகமானது – வெறுமனே ஒரு கண்துடைப்பானதாகும். அத்துடன் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் எதிர்பார்ப்பைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடாகவே அதனை நாம் கண்டித்தும் இருக்கின்றோம்.

கடந்த ஐந்து வருடங்களாக சிறிலங்கா அரசாங்கம் -பாதிக்கப்பட்ட தரப்பினராகிய நாம் – ஏற்றுக்கொள்ளும் தீர்வை வழங்கவில்லை என்பதுடன் – 30/1 தீர்மானமும் அதனை வழங்கவில்லை என்பதும் ஒருபுறமிருக்க – பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மிகவும் ஏமாற்றத்தைத் தரக்கூடிய தீர்மானத்தைக்கூட நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசு தயாரில்லை என்பதையும் – எவ்வித சந்தேகமின்றி நிரூபித்துமுள்ளனர்.

கடந்த 2019 மார்ச் மாதம் – மூன்றாவது தடவையாகவும் சிறிலங்கா அரசுக்கு இரண்டு வருடம் கால அவகாசம் 30/1 தீர்மானத்தை நிறைவேற்ற வழங்கியிருந்தும் கூட –
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் – ஆட்சிக்கு வந்தவுடனேயே – அந்த 30/1 தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும், அதனை ஐ.நா.மனித உரிமை பேரவையிலிருந்து நீக்க வைப்பதற்கான நிகழ்ச்சிநிரலை தாங்கள் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளதுடன் – அவ்வாறு நீக்க முடியாத பட்சத்தில் அத்தீர்மானத்தை கணக்கிலெடுக்கப்போவதில்லை எனவும் உத்தியோகபூர்வமாகவே அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையிலே – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – தனது வாய்மூல அறிக்கையை வரும் மார்ச் மாத அமர்வில் சமர்ப்பிக்க உள்ளார்.
இந்த நிலையிலே – 30/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக கூறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு – கடைசி இரண்டு வருடத்தில் – ஒருவருடம் நிறைவடைந்த நிலையில் – இரண்டாவது வருடத்தைத் தொடர்ந்தும் வழங்குவதில் எந்தவொரு நியாயப்பாடும் இல்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆரம்பத்திலிருந்து மனித உரிமைப் பேரவையினூடாக நீதி கிடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டி வந்திருந்தபோதும் – இத்தீர்மானங்களை நிறைவேற்றும் சர்வதேச நாடுகள் – பாதிக்கப்பட்ட தரப்பாகிய எமது கருத்தை பொருட்படுத்தாமல் – தங்களது தமிழ் அரசியல் முகவர்களைப் பயன்படுத்தி – சிறிலங்கா அரசு, தமிழ் மக்கள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய விடயத்தை முடக்கி வைத்திருந்தார்கள்.

ஆனால் இன்று – ஆட்சியிலுள்ள அரசாங்கம் அந்த தீர்மானத்தை நிறைவேற்றப்போவதில்லை எனக் கூறியுள்ள நிலையிலே – பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை – ஒரு பிரயோசனமற்ற மனித உரிமைப் பேரவையில் முடக்கி வைத்திருப்பது – பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் – முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணையூடாக மட்டுமே சாத்தியமாகும்.
அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ, அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ இலங்கை விசாரிக்கப்படவேண்டும்.

அந்தவகையில் -இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைப்பதற்கு – இலங்கை அரசாங்கத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபையூடாக விசாரிப்பதற்கு – இனியாவது உறுப்புநாடுகள் முன்வரவேண்டும்.
வரும் மார்ச்மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெவுள்ள நிலையில் – பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதிகிடைப்பதை வலியுறுத்தி – எதிர்வரும் 09-திகதி மார்ச் 2020 அன்று மாபெரும் பேரணியொன்றை நடாத்த உள்ளோம்.
இப்பேரணிக்கு – மத குருக்கள்,பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் தங்கள்ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்