Home உலக செய்திகள் லண்டனில் நடைபெற்ற “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் நினைவு நிகழ்வு!

லண்டனில் நடைபெற்ற “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11 ஆம் நினைவு நிகழ்வு!

274
0

ஈகியர் நினைவு நிகழ்வும், ஈகைப்பேரொளி முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வும் லண்டனில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

ஈழத் தமிழர் மீது உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்டு சிறீலங்கா பேரினவாத சிங்கள அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட கொடிய போரை நிறுத்தக்கோரியும், சர்வதேசத்திடம் தமிழர்களுக்கான நீதியைக் கேட்டும் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் நாள் ஜெனீவாவில் ஐ.நா முன்றலில் தன் உடலில் தீயிட்டு தியாகமரணத்தை தழுவிய “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 11ம் ஆண்டு நினைவு நாளான இன்று லண்டனில் அவரது வித்துடல் விதைக்கப்பட்டுள்ள இடத்தில் அமைந்துள்ள 21 ஈகியர் நினைவுக் கல்லறை முன்பாக இன் நிகழ்வு நடைபெற்றது.

இந்று காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இடம்பெற்ற நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதான சுடரினை மாவீரர் கப்டன் நிதி அவர்களின் உறவினரும், முன்னாள் போராளியுமான அப்பன் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள், விடுதல்ப்போராட்டத்திற்கு வலுச் சேர்த்து தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஈகியர்கள், மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், மற்றும் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து “ஈகைப்பேரொளி” முருகதாசனுக்கான சுடரினை தேசிய செயற்பாட்டாளர் திரு. முருகானந்தம் அவர்கள் ஏற்றி வைக்க 21 ஈகியர்களுக்குமான ஈகைச் சுடர்களை நாம் தமிழர் கட்சியின் பிரித்தானியக் கிளையைச் சேர்ந்த திரு.கண்ணன், உலகத் தமிழர் வரலாற்று மையத்தை சேர்ந்த திரு.பவா, அரசியல் ஆய்வாளரும், ஆவணச் சேர்ப்பாளருமான திரு,திபாகரன், அரசியல் ரீதியாக தமிழருக்கான செயற்பாடுகளில் முன்னின்று செயற்படும் திரு.ஆறுமுகம், ஆகியோர் ஏற்றிவைக்க 21 ஈகியர் நினைவுத் தூபிக்கான சுடரினை அத் தூபி அமைப்பின் பிரதான நபராக முன்னின்று செயற்பட்டவரும், பல தளங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்பு நல்கியவருமான திரு.கேதீஸ் ஏற்றி வைத்தார்.

சுடரேற்றலை அடுத்து முருகதாசனின் கல்லறைக்கு முருகராசனின் தாயார் திருமதி.வர்ணகுலசிங்கம் அவர்கள் மலர்மாலை அணிவிக்க, 21 ஈகியர் நினைவுத் தூபிக்கான மலர்மாலையினை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்களின் உறவினர் திரு.பாஸ்கரன் அவர்கள் அணிவித்தார்.

மலர் வணக்கத்தினை “ஈகைப்பேரொளி” முருகதாசனின் சகோதரன் ஆரம்பித்து வைக்க மக்கள் அனைவரும் வரிசைக் கிரமமாக சென்று அனைத்து ஈகியர்களுக்க்உம் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து வணபிதா பிறிண்சிலி குரூஸ், அரசியல் ஆய்வாளர் திரு.திபாகரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த முன்னாள் பெண்போராளி திருமதி.பவானி, தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர் திரு.ஆறுமுகம் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியதை அடுத்து உறுதியேற்புடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.