Home செய்திகள் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி!

நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி!

73
0

வடமாகாணசபையின் முன்னாள் முதல்வரும், நீதியரசருமான விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நாளை ஞாயிறுக்கிழமை கைச்சாத்தாக இருக்கும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று (08/02) சனிக்கிழமை தற்போது நடைபெற்றுவருகிறது.

நாளை செய்துகொள்ளப்படவிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் கூட்டணி தொடர்பான விளக்கங்களை மத்திய குழு உறுப்பினர்களுடன் விக்னேஸ்வரன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

இதேவேளை, இன்று சனிக்கிழமை மாலை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் கட்சிகளின் தலைவர்களும் முக்கிய உறுப்பினர்களும் நாளைய நிகழ்வுக்கான இறுதி ஏற்பாடுகளை செய்வதற்காக கூடுகின்றனர்.

EPRLF ஐ சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், கலாநிதி சர்வேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா , சிவாஜிலிங்கம் மற்றும் தமிழர் சுயாட்சி கழக தலைவர் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

இதேவேளை, இந்த கூட்டணியில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் கட்சிகளின் ஊடாக கணிசமான அளவு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பிரமுகர்களையும் தேர்தலில் நிறுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையிலான பசுமை கட்சி நாளை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என்றபோதிலும் அந்த கட்சி பின்னர் இணைந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது.