Home செய்திகள் ஈழத்துக் கலைஞன் முல்லை யேசுதாஸன் (சாமி ஐயா) காலமானார்!

ஈழத்துக் கலைஞன் முல்லை யேசுதாஸன் (சாமி ஐயா) காலமானார்!

130
0

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் திரைப்படத் துறையில் பல குறும்படங்களை இயக்கியவரும், எழுத்தாளரும், முழுநீள மற்றும் குறும்படங்களில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவருமான “ஈழத்துக் கலைஞன்” முல்லை யேசுதாஸன் (சாமி ஐயா) இன்று (07/02/2020) அதிகாலை மாரடைப்பினால் காலமானார்.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பினால் அவதியுற்ற நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும் இடைநடுவே அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1990களில் இருந்து இன்றுவரை ஏராளமான குறும்படங்களில் நடித்திருந்த முல்லை யேசுதாஸன் (சாமி ஐயா) தேசியத் தலைவரின் பாராட்டைப் பெற்றவர். தமிழீழ விடுதலைப் புலிகளால் இவர் “சாமி ஐயா” என அழைக்கப்படுபவர்.

பெருமளவான சிறுகதைகளை எழுதியுள்ள அவர் “நீலமாகிவரும் கடல்” சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டிருந்தார்.

சமாதான காலத்தில் கிளிநொச்சிக்கு வந்திருந்த இலங்கைத் தமிழரும், தென்னிந்தியாவின் பிரபல இயக்குநருமான மகேந்திரன், அவர்கள் மேற்கொண்ட சினிமா சார்ந்த களப் பயிற்சிகளின் போதும் குறும்படங்கள் உருவாக்கத்தின் போதும் முல்லை யேசுதாஸன் (சாமி ஐயா) பிரதி சார்ந்த பங்களிப்புக்களை நல்கியதுடன் நடித்தும் இருந்தார்.

தனது இறுதிக்காலம் வரை கலைமீதி கொண்ட ஆர்வத்தால் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவந்த அவர் குறித்த தொலைக்காட்சியில் மண்வாசனை சார்ந்த படைப்புக்களை வெளிப்படுத்திவந்தமை குறிப்பிடத்தக்கது