Home செய்திகள் புத்தசாசனத்தையும், நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன்: ஜனாதிபதி

புத்தசாசனத்தையும், நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன்: ஜனாதிபதி

93
0

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றின் நான்காவது கூட்டம் இன்று (03/01) ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

அரசியல் யாப்பின்படி எனது பதவிக்காலத்தினுள் நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் என்றும் புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிப்பேன் என்றும் அதேபோன்று எந்தவொரு பிரசையும் தான் விரும்பிய மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை எப்போதும் காப்பேன் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்..

நான் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இந்நாட்டின் இராணுவ அதிகாரியொருவராகவும், பத்து வருடங்களுக்கு அண்மித்த காலம் இந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராகவும் சேவையாற்றினேன்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் மூன்று தலைமுறைகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், துணை சபாநாயகர், சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இரண்டு ஜனாதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் நான் தற்போது ஏழைகளின் ஆடை அணியவில்லையென்றாலும் கூட அவர்களைதான் நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றேன். எமது ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த சிறந்த மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

பயங்கரவாதம், தீவிரவாதம், திருட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட்ட நமது தாய்நாட்டை பாதுகாப்பான நாடாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.இதேவேளை மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் எப்போதும் அவர்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்.எனவே மக்களுக்கு நாம் செய்யவேண்டியது அவர்களுக்கு வேண்டிய சிறந்த சேவையை வழங்குவது மாத்திரமேயாகும்.

வறுமை கோட்டின் கீழ் வாழும் அனைவரது வாழ்க்கையினையும் மேன்மையடைய செய்வதே எமது நோக்கமாகும்.அதாவது நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எந்ததொரு அச்சுறுத்தலும் இன்றி சந்தோசமாக வாழக்கூடிய சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்துவேன் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்றக் கூட்டத்தொடரில், சபாநாயகர் கருஜெயசூரியவினால் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்று தனது பணிகளை ஆரம்பித்துள்ளார் சஜித் பிரேமதாச.